tamilnadu

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர், ஜூலை 2- தென்மேற்குப் பருவமழையின் காரணமாக உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து துவங்கி யுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமரா வதி அணை சுமார் 90 அடி உயரம் கொண்டது. இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறு கிறது. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. தென்மேற்குப் பருவமழை காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் மழை அமராவதி அணை யின் முக்கிய நீராதாரமாக உள்ளது. கடந்த மாதங்களில் பாச னத்துக்காகவும், குடிநீருக்காகவும் தண்ணீர் திறக்கப் பட்டதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கடந்த 3 மாதங்களாக நீர்வரத்து எதுவும் இல்லை. அவ்வப்போது மழை பெய்யும்போது மட்டும் சொற்ப அளவு நீர்வரத்து இருந்தது. வழக்கமாக தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதத்திலிருந்து துவங்கிவிடும். ஆனால், நடப்பாண்டு ஜூன் முடிந்த நிலையிலும் தென்மேற்குப் பருவமழை துவங்க வில்லை. இந்நிலையில், கேரளாவிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து  வருகிறது. இதனால், அமராவதி அணைக்கு நீர்வரத்து துவங்கி யுள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று 80 கனஅடியாக இருந்த நிலையில், தற்போது 411 கனஅடியாக உயர்ந்தது. மேலும், குடிநீருக்காக 8 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.