திருவண்ணாமலை, ஆக. 5- திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் திருவண்ணாமலையில் தொடர்ந்து கன மழை பெய்ததில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. ஒசூர் அருகேயுள்ள கெலவரப் பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணை ஆகியவை முழு கொள்ளளவை எட்டியதால் 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல், ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 4,270 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவு 119 அடியாகும். தற்போது நீர்மட்டம் 113 அடி கொள்ளளவை எட்டியுள்ளது. அதேபோல், குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 50.18 அடியாகவும், மிருகண்டா அணையின் நீர் மட்டம் 20.50 அடியாகவும், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 50.71 அடியாகவும் உயர்ந்திருக்கிறது. மேலும், ஜவ்வாதுமலை பகுதியில் தொடர்ந்து கன மழை நீடிப்பதால், அங்குள்ள பீமன் நீர்வீழ்ச் சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, நீர் வீழ்ச்சி பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.