tamilnadu

img

முதலீட்டாளர் மாநாட்டில் அறிவித்த முதலீடுகள் எங்கே?

திருநெல்வேலி:
கடந்த ஆண்டு தமிழக அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதி அளிக்கப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஓராண்டை கடந்தும்கூட வந்து சேரவில்லை என்று எஸ்.எஸ்.சுப்ரமணியன் கூறினார்.திருநெல்வேலியில் சனியன்று துவங்கிய தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில மாநாட்டுக்கு தலைமை வகித்த அமைப்பின் மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்ரமணியன் மேலும் பேசியதாவது: உலக மயம், தாராளமயம், தனியார்மயம் ஆகியவற்றை கொண்டு வந்த அமெரிக்காவில் இன்று அந்த மயங்கள் தோல்வி அடைந்துவிட்டன. ஆனால் இந்தியாவில் மோடி அரசு அந்த மயங்களை துக்கிப்பிடிக்கிறது. இந்திய பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து முட்டுச்சந்தில் நின்று கொண்டிருக்கிறது. வளர்ச்சி குறித்து பேசுகிறார்கள் வேலைவாய்ப்பில், விவசாயத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரேநாடு, ஒரேமொழி, ஒரே ரேசன் கார்டு என்பதோடு ஒரே தளபதி, அடுத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவரவும் அதற்கு தன்னை முன்னிறுத்தவும் மோடி முயற்சிக்கிறார். இந்தி திணிப்புக்கான முயற்சிகளும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தமிழக மின் வாரியத்தை இயந்திரமயமாக்குவதன் மூலம் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் நிலை கேள்வக்குறியாக உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தால் 12 ஆயிரம் கணக்கீட்டு ஊழியர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். நிரந்தர தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்ப இயந்திரமயமாக்கல் இட்டுச் செல்லும். ஆளில்லா துணை மின் நிலையங்கள் அமைப்பதால் பொறியாளர்களுக்கான வேலை பறிபோகும். 30 ஆயிரம் ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ள மின் ஊழியர் மத்திய அமைப்பை மீறி ஊழியர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.    2018இல் முந்தைய நட்டத்தை ஈடுகட்டிய ரூ.4,000 கோடி லாபம் என்கிற நிலையிலிருந்து தற்போது ரூ.7,6100 கோடி நட்டம் என்பதை ஏற்க முடியாது. தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் அரசின் கொள்கையால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளது. மின்துறையை தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி விற்கும் தரகு நிறுவனமாக மாற்றுகிறீ்ர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.