நெல்லை
கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழையை தந்து செழுமையை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த 3 மாவட்டத்தில் 1400-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன.
பாபநாசம், சேர்வலாறு அணை பகுதியில் புதனன்று இரவு முதல் வியாழனன்று காலை வரை இடைவிடாது பெய்த கனமழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.60 (மொத்த கொள்ளவு 143 அடி) கிடுகிடுவென உயர்ந்தது. பாபநாசம் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்று பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அகஸ்தியர் அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாரும் செல்ல முடியாத வகையில் வனத்துறையினர் சாலையில் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.