tamilnadu

img

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

திருநெல்வேலி
நீர்பிடிப்பு பகுதிகளில் கோடைமழை பெய்யாவிட்டால் பாபநாசம் அணை, மணிமுத்தாறு நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிடும். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரத்திலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியிலும் வெயில் கடுமையாக அடித்து வருவதால் அணைகளில் நீர்இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைபை பூர்த்தி செய்யும் பிரதான அணைகள் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு ஆகும். அணைப்பகுதியில் கோடைவெயில் கடுமையாக அடித்து வருவதாலும், மழை பெய்யாததாலும் இந்த பிரதான அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்துவருகிறது.

143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் தற்போது 58.45அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. வினாடிக்கு 8 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 305 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. இதேபோல் 156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் 70.34 அடியும், 118 அடி நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் 81.22 அடியும் தண்ணீர் இருக்கிறது.  தற்போது சில இடங்களில் அவ்வப்போது சிறிதுநேரம் மட்டுமே கோடைமழை பெய்கிறது. ஆனால் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. நீர்பிடிப்பு பகுதிகளில் கோடைமழை பெய்யாவிட்டால் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிடும். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.

கடந்த ஆண்டும் இதே காலகட்டத்தில் பாபநாசம் அணை நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்துவிட்டது. பின்பு மணிமுத்தாறு அணை தண்ணீர் கைகொடுத்தது. அதேபோல் இந்த ஆண்டும் மழையின்றி பாபநாசம் அணை வறண்டுவிட்டால், மணிமுத்தாறு அணை தண்ணீரை பயன்படுத்தி நிலையை சரிசெய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்திலும் அணைப்பகுதிகளில் மழை இல்லை. ராமநதி அணை மட்டும் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. மற்ற அணைகளில் சிறிதளவு தண்ணீரே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.