படுகொலைக்கு காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணமாகும்.
தென்மாவட்டங்களில் இதுபோன்று தலித் மக்கள் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் சாதிய ஆதிக்க வெறியர்களால் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது. அரசும், காவல்துறையும் இதனை தடுத்து நிறுத்தவும், சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவே இதுபோன்ற படுகொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.
எனவே, தோழர் அசோக்கை படுகொலை செய்த கொலையாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, கொலைக்குற்றப் பிரிவுகளுடன் - எஸ்.சி., / எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளை இணைப்பது உள்ளிட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், படுகொலை செய்யப்பட்ட அசோக்கின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டுமெனவும், முன்னரே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தோழர் அசோக் படுகொலையை கண்டித்தும், சாதி வெறியர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்திட வலியுறுத்தியும் அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக கண்டன இயக்கங்கள் நடத்திட வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.ஒடுக்குமுறைகளை எதிர்த்து சமத்துவத்திற்காக குரல்கொடுக்கும் ஜனநாயக சக்திகள், தனிநபர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பினரும் இந்த படுகொலைக்கு எதிராக கண்டனக் குரலெழுப்ப முன்வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.