திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 3986 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், நெல்லை பேட்டை செந்தமிழ்நகர்ப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் அனைவரும் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால், சுகாதாரப் பணியாளர்கள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் நேற்று மட்டும் 41 பேருக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.