தூத்துக்குடி, ஏப்.21- ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற மே பத்தொன்பதாம் தேதி நடைபெற உள்ளது. திமுகசார்பில் நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள் ளனர். இதில் ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளராக ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் சண்முகையா அறிவிக்கப் பட்டுள்ளார். தன்னை வேட்பாளராக அறிவித்தமைக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையா வாழ்த்து பெற்றார். அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச்செயலாளார் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.,துணைப்பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஓட்டப்பிடாரத்தில் ஸ்டாலின்
மே 1ஆம் தேதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தை ஓட்டப்பிடாரத்தில் துவங்குகிறார் ஸ்டாலின். 1,2 தேதிகளில் எம்.சி.சண்முகையாவை ஆதரித்து ஒட்டப்பிடாரத்திலும் 3மற்றும்4ஆம் தேதிகளில் மருத்துவர் சரவணனை ஆதரித்து திருப்பரங்குன் றத்திலும் 5, 6ஆகிய தேதிகளில் பொங்கலூர் பழனிச்சாமிக்காக சூலூரிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 7, 8 ஆகிய தேதிகளில் அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற் கான அறிவிப்பை திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.