tamilnadu

img

விவசாயிகளை பொய் வழக்குகளால் அச்சுறுத்த முயற்சிப்பதா? திருவாரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் போராட்டம்

திருவாரூர்:
குடியரசுத் தினத்தன்று தில்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து திருவாரூரில் போராடிய விவசாயிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

குடியரசுத் தினத்தன்று தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்தும் திருவாரூரில் அனைத்து விவசாயிகள் சார்பில் மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அப்பேரணி தண்டலை எனும் கிராமத்திற்கு அருகே வரும் போது, அங்கு ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம் முன்பு குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி உள்பட 14 பேரை அராஜகமாக கைது செய்து, 5 பேர் மீது கடும் குற்றச்சாட்டுகளை புனைந்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருவாரூர் காவல்துறையின் இத்தகைய அராஜகத்தைக் கண்டித்தும், தமிழக அரசைக் கண்டித்தும், திருவாரூரில் ஜனவரி 31 ஞாயிறன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்திற்கு திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையேற்றார். திமுக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் கே.ஜெயக்குமார் எம்.பி., மதிமுக கொள்கை விளக்கச் செயலாளர் மதுரை அழகுசுந்தரம், வி.சி.க மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், திராவிடர் கழக பிரச்சார அமைப்பாளர் அதிரடி அன்பழகன், தமிழக  வாழ்வுரிமை கட்சி பொதுச் செயலாளர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை பாதுஷா, மக்கள் அதிகாரம் செய்தித் தொடர்பா ளர் மருது உள்ளிட்டோர் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளர் சிவபுண்ணியம், நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி.ராஜா, பா.ஆடலரசன், திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் ஜி.பாலு, திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.மாசிலாமணி உள்பட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.