மன்னார்குடி:
நேரடியாக ரயில் பயணிகளோடு தொடர்புடையதும் அமோகலாபத்தை அள்ளித் தரும் இந்திய உணவு மற்றும் சுற்றுலாக் கழக பங்குகளை (ஐஆர்சிடிசி) விற்கக் கூடாது. இந்நிறுவனத்தில் பங்குதாரர்கள் ஆதிக்கம் உருவாவது பயணிகள் நலன்களை சேர்த்து பாதிக்கும். எனவே இந்த தனியார்மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயு) வலியுறுத்தியுள்ளது.
இது பற்றி டிஆர்இயுவின் உதவிபொதுச் செயலாளர்டி.மனோகரன் தெரிவித்துள்ளதாவது;மொத்தம் 11 ரயில்வே பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதில் லாபகரமான நிறுவன பங்குகள் அடுத்தடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மினி ரத்னா அந்தஸ்துபெற்ற இந்திய உணவு மற்றும் சுற்றுலாக் கழக பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஒரு பங்கு மதிப்பு ரூ.10 என்ற அளவில் இரண்டு கோடி பங்குகள் விற்க பங்குச் சந்தை செபி அமைப்பிடம், ஆரம்ப பொதுச்
சலுகை பங்குகள் விற்பனைக்கான வரைவுக் கடிதம் இந்நிறு வனம் தாக்கல் செய்து இருக்கிறது.
கடந்த 2018-19 நிதியாண்டு 4949 லட்சம் பயணிகள் இ-டிக்கெட்மூலம் பயணம் செய்தார்கள். இதன்மூலம் ரூ. 32069 கோடி வருவாய் ஈட்டியது. இந்நிறுவனத்திற்கு ரயில் நீர் விற்பனையில் ரூ.166 கோடி, நேரடி உணவு விற்பனையில் ரூ.277 கோடி, உணவு விற்பனை குத்தகைக்கு விட்டதில் ரூ.446 கோடி, சுற்றுலாப் பிரிவில் ரூ.407 கோடி, முன்பதிவு பயணச்சீட்டு விற்பனையில் ரூ. 204 கோடி வருவாய் மற்றும் இதர வருவாய்கள் சேர்த்து மொத்தம் 1544.16 கோடி கடந்த 2017-18 நிதியாண்டு வருவாயாக கிடைத்தது. இதில் வரி போக நிகர லாபம் ரூ.222.02 கோடி.இந்நிறுவனத்திற்கு 2016-17 நிதியாண்டு ரூ.1538.93 கோடி வருவாய் இருந்தது. இ-டிக்கெட்டுகளுக்கு சேவைக் கட்டணம் அடுத்த நிதியாண்டு கைவிடப்பட்டதால் 2017-18 நிதியாண்டு இதன் வருவாய் ரூ.1468.18 கோடியாக சரிந்தது. தற்போது அதை வசதிக் கட்டணம் என்ற பெயரில் மீண்டும் நிர்ணயித்து இருப்பதால் சுமார் ரூ.600கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும். இந்த வருவாய் உயர்வுஇந்நிறுவன பங்குகள் விற்பனைக்கு மேலும் கைகொடுக்கும். பங்குகள் கூடுதல் விலைக்கு விற்பனையாவதன் மூலம் பங்குகள் விலக்கலில் சுமார் ரூ.650 கோடி மத்திய அரசால் நிதி திரட்ட முடியும்.
மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.25392 கோடி தட்கல் பயணச் சீட்டுகள் மூலம் ரயில்வேத் துறைக்கு வருவாய் கிடைத்து இருப்பதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஏடுசெய்தி வெளியிட்டு இருக்கிறது. ரயில்வே கவுன்டர் பயணச் சீட்டுகளுக்கான “கிரிஸ்” நிறுவனத்தின் “நவீன கால பயணச்சீட்டு முறை” என்ற மென்பொருளை ஐ.ஆர்.சி.டி.சி கட்டுப்பாட்டில் எடுப்பதால் இ-டிக்கெட்டுகள் வேகம் கூட்ட இயலும். தட்கல் பயணச் சீட்டுகள் விற்பனை ஐ.ஆர்.சி.டி.சி வசம் மாறும். இதனால் பங்குகள் மதிப்பு தொடர்ந்து உயர வழி வகுக்கும்.முதற்கட்டமாக இந்நிறுவனம் 12.5 சதவீத பங்குகளை நடப்பு 2019-20 நிதியாண்டு விற்பனைக்கு விடுகிறது. இதை கையாள புக் ரன்னிங் மேனேஜர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிறுவன 49 சதவீத பங்கு விற்பனை மூலம் ஏறத்தாழ ரூ.2000கோடி வரை நிதி திரட்ட இயலும்.ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் மேற்கொண்டு வரும் செயல்களான பயணச்சீட்டு, உணவு, சுற்றுலா, ரயில் நீர், தங்கும் வசதிகள் நேரடியாக ரயில் பயணிகளோடு தொடர்புடையது.இந்நிறுவனத்தில் பங்குதாரர்கள் ஆதிக்கம் உருவாவது பயணிகள் நலன்களை சேர்த்து பாதிக்கும். இது தனியார்மய நடவடிக்கை. கைவிட வேண்டும்என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்துகிறது என டி.மனோகரன் தெரிவித்துள்ளார்.