tamilnadu

img

பல துறைகளில் தமிழகத்திற்கு விருது ஊழியர்களின் பங்களிப்பு இல்லாமலா? அரசு ஊழியர் சங்கம் கேள்வி

திருவாரூர்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் நடைபெற்ற முன்னணி ஊழியர்களின் கூட்டத்தில் மாநில தலைவர்மு.அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். தலைமைச் செயலக அதிகாரிகள், ஊழியர்கள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரின் கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்து பேச்சுவார்த்தைகளின் மூலமாகவும், போராட்டங்களின் மூலமாகவும் பல்வேறு கோரிக்கைகளை மீட்டெடுத்து கொடுத்துள்ளது அரசு ஊழியர் சங்கம்.  கூட்டத்தில் அவர்கள் பேசியதாவது:

சங்கத்தின் பங்களிப்பு இல்லாமல் ஊழியர்களுக்கு ஏதும் கிடைத்திருக்காது. அந்த அளவிற்கு அரசு ஊழியர்களின் இரத்தநாளமாக செயல்பட்டு வருகிறது. பல பிரிவுஅரசு ஊழியர்களுக்கு புதிய அங்கிகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. தமிழக முதலமைச்சர் 16,389 கோப்புகளில்கையெழுத்திட்டு சாதனை படைத்துள்ளதாக முதல்வரும், அமைச்சர்களும் பெருமைபட்டுக் கொள்கிறார்கள். இவ்வளவு விரைவாக கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு பின்னால் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கடும் உழைப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?இப்படி எல்லா வகையிலும் பணியாற்றக் கூடிய அரசு ஊழியர்களைத் தான் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் அரசு பழி வாங்குகிறது. நம்முடைய அனைத்து பிரச்சனை களுக்கும் போராட்டம் மூலமே தீர்வுகாணமுடியும். போராட்டங்களுக்கு  ஓய்வு கொடுத்துவிட்டால் நம்மை ஆளும்அரசுகள் நம்மை முற்றாக புறக்கணித்துவிடும். 

தற்போது கூட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தஅறிவிப்பை அரசு தானாக வெளியிட வில்லை. இப்பகுதி மக்களின் தொடர் போராட்டங்கள் அரசை இந்த முடிவை எடுப்பதற்கு தள்ளியிருக்கிறது. புதிய பென்சன் திட்டத்தில் சுமார் 5 லட்சம்பேர் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்கும் வகையில் புதிய பென்சன்திட்டத்தை கைவிட அரசை நிர்பந்திக்கும் வகையில் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருநாள் பதவியில் இருந்தால் கூட அவர்களுக்கு பென்சன் வழங்கப்படுகிறது. ஆனால் வரையறுக்கப்பட்ட ஊதியத்துடன் பட்ஜெட் வாழ்க்கை வாழ்ந்து வரும் அரசு ஊழியர்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கை இல்லாமல் உள்ளது. பல துறைகளில் தமிழகத்திற்கு விருது கிடைத்தது ஊழியர்களின் பங்களிப்பு இல்லாமலா?

எனவே அணிவகுத்து நிற்கும் பல்வேறுபிரச்சனைகளுக்கு தீர்வு காண போராட்டமே சிறந்த ஆயுதம் ஆகும். மேலும் ஒரே நம்பிக்கையாக திகழும் நீதிமன்றங்கள் மூலமாகவும் நமது நியாயத்தை வென்றெடுத்தாக வேண்டும். ஆகவே அரசு ஊழியர்கள் நமக்கு எல்லா வகையிலும் பாதுகாப்பாக இருக்கக் கூடிய சங்கத்தை பலப்படுத்தவும், வளர்த்தெடுக்கவும் முன்னுரிமை கொடுத்து பணி யாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.