tamilnadu

img

சவக்குழித் தோண்டிய ஊராட்சித் தலைவர்...

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதிவெறியின் கோர தாண்டவத்தால், ஊராட்சி மன்றத் தலைவரை மயானத்தில் குழிதோண்ட வைத்த அவல சம்பவம் அறங்கேறியுள்ளது. இந்த அவல சம்பவத்தை மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டக்குழு வன்மையாக கண்டித்துள்ளது. 

இந்த சாதி ஆணவ செயலில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து உடனடியாக, கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், அரியாகுஞ்சூர் ஊராட்சி, சின்ன கல்தாம்பாடிகிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக பட்டியலின (இருளர்) வகுப்பை சேர்ந்த முருகேசன்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சனிக்கிழமையன்று (மே 30) அந்த கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த தகவலை அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் தனது மனைவியுடன், மாலை ஒன்று  வாங்கிக் கொண்டு, மரணமடைந்தவரின் இறுதிச் சடங்கு நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.ஆனால், அங்கிருந்தவர்கள் தலைவர் முருகேசனை மாலை போட அனுமதிக்காமல், ‘நீ தாழ்ந்த’ சாதியை சேர்ந்தவன். எங்கள் சாதியில் நிகழ்ந்த மரண சடங்கிற்கு வந்து மாலை போட உனக்கு தகுதியில்லை. நீ போய் மயானத்தில் குழிவெட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளனர். சாதி ஆதிக்க சக்திகளின் மிரட்டலுக்கு பயந்த ஊராட்சிமன்றத் தலைவர் முருகேசன், சடலத்திற்கு மாலை அணிவிக்காமல்,  மயானத்திற்கு சென்று, தனது மனைவியுடன்  குழி
தோண்டியுள்ளார்.இத்தகைய, சாதிஆணவ செயலில் ஈடுபட்டவர்கள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.இவ்வாறு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.