திருவனந்தபுரம்:
கேரளத்தில் திங்களன்று 794பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்பு மூலம் 519 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் நோய் தொற்றிடம் தெரியாத 24பேர் உள்ளனர். கோவிட் குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
திங்களன்று நோய் தொற்று ஏற்பட்டதில் 148 பேர் வெளிநாடு களில் இருந்தும் 105 பேர் இதர மாநிலங்களில் இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள். 15 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 பிஎஸ்எப் வீரர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ஞாயிறன்று 245 பேர் குணமடைந்தனர். இதோடு 5618 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 7611 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,65,233 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1,57,523 பேர் வீடுகள்/ நிறுவனங்களிலும் 7710 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். திங்களன்று 871 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
திங்களன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 14,640 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினர் உட்பட மொத்தம் 5,46,000 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில் 5969 மாதிரிகளின் முடிவுகள் நிலுவையில் உள்ளன. முன்னுரிமை பிரிவினிரின் 98,115 மாதிரிகளில் 94,016 மாதிரிகள் நோய் இல்லை என உறுதி செய்யப்பட்டன.திங்களன்று 20 புதிய கட்டுப்பாட்டு பகுதிகள் புதிதாக அறிவிக்கப்பட்டன. ஒரு பகுதியில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டன. தற்போது கேரளத்தில் 337 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.