tamilnadu

img

போடி உள்ளிட்ட 4 நகராட்சிகளில் துணை முதல்வர் ஓபிஸ் ஆய்வு

தேனி
போடி உள்ளிட்ட நான்கு நகராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார் . தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய 4 நகராட்சி அலுவலகங்களுக்கு ஞாயிறன்று  நேரிடையாக சென்று நகராட்சிப்பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து  சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை தொடர்புடைய அலுவலர்களிடம் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்விற்குப்பின், துணை முதல்வர் தெரிவித்ததாவது:
தேனி  மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுத்திடும் வகையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் மேற்கொண்ட துரித நடவடிக்கையின்படி, மாவட்டத்தில் கடந்த 11 நாட்களில் எவ்வித நேர்மறையான நபர்கள் கண்டறியப்படவில்லை என்பது நல்ல செய்தியாகும். 43 பேருக்கு கொரோனா தோற்று கண்டறியப்பட்டதில் 35 பேர் குணமடைந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 110 பேர்  மேலும் 14 நாட்களுக்கு மருத்துவர்களால் கண்காணிப்படுவர்.

மேலும், கம்பம் மற்றும் போடி பகுதிகளிலிருந்து கேரள மாநிலத்துக்கு மாற்று பாதைகள் வழியாக தோட்ட வேலைக்கு செல்பவர்கள் கேரள மாநில காவல்துறையினரால் தடுக்கப்பட்டு, மீண்டும் நடை பயணமாகவே சொந்த இடத்திற்கு திரும்பி வருவதாக செய்தி தாள்களின் வாயிலாக அறிந்தேன். தற்சமயம், தேசிய அளவிலும் மற்றும் மாநில அளவிலும் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் காவல் துறையினரும், வனத்துறையினரும் இணைந்து அவர்கள் கேரள மாநிலத்திற்கு செல்லாமல் இருப்பதற்கான உரிய நடவடிக்கைகளை நமது மாநில எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும் என்றார்.