தேனி
பெரியகுளம் மற்றும் தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது .
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக தேனி ,பெரியகுளம் நகராட்சிகளில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில், நடைபெற்றது .தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் ,பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது,பெரியகுளம் மற்றும் தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் தலா 3 நபர்கள் வீதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 நபர்கள் குணமடைந்துள்ளனர். மேலும், குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 144-இன் கீழ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் இல்லங்களுக்கு நேரடியாக சென்று வழங்கிட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவிக்கொண்டிருக்கும் நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த 12 நாட்களில் கொரோனா புதிய தொற்று ஏற்படவில்லை என்பது ஒரு சாதனையாகும். பெரியகுளத்தின் குறுக்கே ஒடுகின்ற வராகநதி ஆற்றினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.திலகவதி, பெரியகுளம் சார் ஆட்சியர் செல்வி டி.சிநேகா, தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.