தேனி:
21 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள மாநில மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்குகிறது.
இதற்கான விழா வண்டிப் பெரியாறில் பிப்.1-ஆம் தேதி நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு வல்லக்கடவு வனப்பகுதியில் இருந்து உயரழுத்த மின்சாரக் கம்பிகள் மூலம் மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதன்மூலம் அணைப்பகுதியில் மின் விளக்குகள், 13 மதகுகள் இயங்கின.
1999-ஆம் ஆண்டு வல்லக்கடவு பகுதியில் யானைகள் சென்றது, அதில் ஒனை மீரு யாது உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.இதையடுத்து பெரியாறு புலிகள் வளர்ச்சி ஆணையம் முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து கேரள உயர் நீதிமன்றம் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறையினர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். புதை குழி வழியாக மின்சாரம் கொண்டு செல்வதற்கு உயர் நீதிமன்றம் மூலம் அனுமதி கோரினர். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் 95 லட்ச ரூபாய் கேரள மின்சார வாரியத்திற்கு வைப்புத்தொகை செலுத்தப்பட்டது. புதைகுழி வழியாக மின்சாரம் கொண்டு செல்வதற்கு தேக்கடி வனத்துறை அனுமதி கோரினர். நீண்டகால இழுபறிக்குப் பிறகு பெரியாறு புலிகள் வனச் சரணாலயத்தினர் அனுமதி வழங்கினர்.இதற்கிடையில் புதைகுழி மூலம் மின்சார கம்பிகள் செல்வதற்கு திருத்திய மதிப்பீடு கோரப்பட்டது. அதன்பேரில் கேரள மாநில மின்சார வாரியத்திற்கு இரண்டாம் கட்டமாக தமிழக பொதுப்பணித்துறை ரூபாய் 70 லட்சம் வைப்புத்தொகையாக செலுத்தியது. வைப்புத்தொகை ரூபாய் 1 கோடியே 65 லட்சமாக உயர்ந்தது.இதற்கிடையில் கேரள மாநில மின்துறை புதைகுழி வழியாக மின்சாரம் கொண்டு செல்வதற்கு இடம் கையகப்படுத்த கேட்டனர். பெரியாறு புலிகள் வனச்சரணாலயம் .2853 ஹெக்டேர் நிலம் (5.65 கிலோ மீட்டர் நீளம்) ஒதுக்கினர். அதற்கும் மின்துறை ரூபாய் 16 லட்சம் செலுத்தியது.
தொடர்ந்து மின்சார இணைப்பு கொடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. கோதமங்கலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த நவம்பர் 2020-ஆம் ஆண்டு பணிகளை தொடங்கியது. ஜனவரி நான்காம் தேதி பணிகளை நிறைவு செய்து, மின்சார வாரியத்திடம் ஒப்படைத்தது.இந்த நிலையில் வரும் பிப்.1-ஆம் தேதி வண்டிப்பெரியாறில், முல்லைப் பெரியாறு அணைக்கு மின் இணைப்புக் கொடுக்கும் நிகழ்வு தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.இதில் கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி கலந்து கொண்டு மின் விநியோகத்தை தொடங்கி வைக்கிறார். விழாவில் இடுக்கி மக்களவை உறுப்பினர் டீன் குரியகோஸ், பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் பிஜிமோள் மற்றும் தமிழக, கேரள பொதுப்பணித்துறையினர் கலந்து கொள்கின்றனர்.