தேனி:
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் ஒரு நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த இர்பானுக்கு 10 நாள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்து, அக்டோபர் 25 ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும்என்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டார் . நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தர்மபுரிஅரசு மருத்துவக்கல்லூரியில் படித்த இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரை15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சேலம் நீதிபதிஉத்தரவிட்டார். இது குறித்து வழக்கை விசாரித்துவந்த தேனி சிபிசிஐடி போலீசார், இர்பான் படித்துவந்த தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்மற்றும் கல்லூரிக் குழுவினரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது உறுதிப்படுத்தினர். இதன் மீதான வழக்கு விசாரணை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீதிமன்ற காவல்செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்ததை யடுத்து தேனி நீதிமன்றத்தில் இர்பான் ஆஜர்படுத்தப்பட்டார். இதன் மீதான வழக்கை விசாரித்த தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம், இர்பானுக்கு மேலும் 10 நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து வரும்அக்டோபர் 25 ஆம் தேதியன்று ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து மாணவர் இர்பானை தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறைக்கு அழைத்துச்சென்றனர்.
ஜாமீன் மனு தள்ளுபடி
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சென்னை பாலாஜி மருத்துவக்கல்லூரி மாணவர் பிரவீன் மற்றும் எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மாணவர் ராகுல் மற்றும்அவர்களது தந்தைகள் சரவணன், டேவிஸ்ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேரின் சார்பில் ஜாமீன் கேட்டு சென்னைஉயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜயகுமார் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அக்டோபர் 4ஆம் தேதி மனு அளித்திருந்தார். அதன் மீதான விசாரணை 10ஆம் தேதி நடைபெற்ற போது சிபிசிஐடி ஆய்வாளர் சித்ராதேவி நேரில் ஆஜராகாததால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாயன்று தேனி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் மாணவர்கள் பிரவீன், ராகுல் சார்பில் வழக்கறிஞர்கள் விஜயதினகரன், விஜயகுமார் ஆஜராகினர்.அதில்குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மையங்களில் முறையாக நீட் தேர்வு எழுதிதேர்ச்சி அடைந்தவர்கள். அதன் மூலம் தனியார்கல்லூரி நிர்வாக இட ஒதுக்கீட்டின் அடிப்படை யில் உண்மையான சான்றிதழ்கள் அளித்து சேர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தாமாகவே காவல்துறையினரிடம் விளக்கம் அளிக்க வந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் மாணவர்கள் உதித்சூர்யா மற்றும் இர்பான் மீது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உறுதிப்படுத்திய சிபிசிஐடி காவல்துறையினர் மாணவர்கள் பிரவீன்,ராகுல் ஆள்மாறாட்டம் செய்ததை தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை என்பன உள்ளிட்ட 5 கேள்விகளுக்கு சிபிசிஐடியினர் பதிலளிக்கவில்லை. எனவே குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதி முன்பு வாதிட்டனர். ஆனால் நீதிபதி பன்னீர்செல்வம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நான்கு பேரின் வழக்கறிஞர்கள் கூறுகையில், மாணவர்கள் பிரவீன்,ராகுல் அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகியோர் குற்றமற்றவர்கள். இவர்களின் சார்பில் தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை மேல்முறையீடு செய்யவிருப்பதாக தெரிவித்தனர்.
சிபிசிஐடி குற்றச்சாட்டு
இதனிடையே, உதித்சூர்யா ஜாமீன் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் செவ்வாயன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி கூறுகையில், இந்த வழக்குமிகவும் முக்கியமானது. அவ்வளவு எளிதாக கடந்து செல்லவோ, குறைத்து மதிப்பிடவோ இயலாது. மாணவனின் தந்தையே இந்த வழக்கின் வில்லன் என்று குறிப்பிட்டார். சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் தவறு நடைபெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், உதித்சூர்யா தரப்பில் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை எனவும் எனவே உதித் சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். உதித் சூர்யாவின் தந்தையும் தேனி மாவட்டசெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, கைது செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும், இன்னும் காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.தேனி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை உதித் சூர்யாவின் தந்தை திரும்பப் பெற்றால், உதித் சூர்யாவிற்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும்உதித் சூர்யாவின் தந்தை ஜாமீன் கோரி தாக்கல்செய்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மாற்றி பட்டியலிட நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.