தேனி:
கவிஞரும்,தமுஎகச மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் கலை இலக்கியா உடலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்திரா என்ற இயற்பெயர் கொண்ட கலை இலக்கியா இடதுசாரி சிந்தனையும், மொழிப்பற்றும் கொண்ட எளிய கிராமத்து பெண்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் மற்றும் தேனி மாவட்டப் பொருளாளராக பொறுப்பில் இருந்த இவர் அமைப்பு கடந்த பரந்த நட்பும் தோழமையும் நிரம்பி வழியும் பெண்ணியப் படைப்பாளியாக திகழ்ந்தார்.
சில காலமாகவே உடல நலம் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தான் வரித்துக் கொண்ட லட்சியங்கள் மீதான செயல்பாடுகளையும் எழுத்தையும் சிறிதும் குறைத்துக் கொள்ளாமல் இயங்கியவர்.நான்கு நாட்களுக்கு முன்பு மதுரை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தவர், திங்களன்று நிலைமை மோசமாகி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலை மோசமாகி முன்னேற்றம் அடைய வாய்ப்பில்லை என்ற நிலையில் வீட்டிற்கு கொண்டு செல்லும் முடிவுடன் இரவு 10 மணிக்கு மருத்துவமனையில் இருந்து ஊருக்கு வரும் வழியில் உயிர் பிரிந்து விட்டது.கலை இலக்கியாவின் இணையர் காமுத்துரை அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
அன்னாரது இறுதி நிகழ்ச்சி தேனி அருகே வீரபாண்டியில் நடைபெற்றது
தமுஎகச அஞ்சலி
தமுஎகச மாநிலக்குழு சார்பில் மாநில கவுரவத் தலைவர் ச.தமிழ்செல்வன், மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலை இலக்கியா உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர். மாநில நிர்வாகிகள் உதயசங்கர், லட்சுமிகாந்தன், ஸ்ரீரசா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெண்புறா, கரிசல் கருணாநிதி,ம.காமுத்துரை, அய்.தமிழ்மணி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜீவசிந்தன். சிவக்குமார், லெனின், கவிவாணன், சீருடையான், மோகன் குமாரமங்கலம், சிவாஜி, பிரேமா, சென்னை மலர்விழி, கடலூர் வெற்றிச்செல்வி, தென்சென்னை பாபிதா, திரைகலைஞர் ஏகாதசி, இதயநிலவன், மற்றும் மதுரை,சிவகங்கை,திண்டுக்கல் மாவட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தேனி மாவட்ட தலைவர்கள் சேதுராம், உமர்பாரூக் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சிபிஎம் அஞ்சலி
மறைந்த எழுத்தாளர் கலை இலக்கியா உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டக்குழு சார்பில் மாவட்டச்செயலாளர் டி.வெங்கடேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு,தாலுகா செயலாளர் சி.சடையாண்டி, சிபிஐ மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத், வையை தமிழ்சங்கம் இளங்குமரன், உரத்த சிந்தனை நீல.பாண்டியன், இளங்குயில் ஞானபாரதி, போக்குவரத்துக்கழக தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். நிறைவாக அஞ்சலி கூட்டம் மாநிலக்குழு உறுப்பினர் சுருளிப்பட்டி சிவாஜி தலைமையில் நடைபெற்றது.