tamilnadu

தஞ்சாவூர், கரூர் முக்கிய செய்திகள்

வீடு புகுந்து நகை கொள்ளை
கும்பகோணம், ஆக.31- கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் மேலவீதியில் வசிப்பவர் மனோகரன், ரயில்வே ஊழியர். இவர் சம்பவத்தன்று குடும்பத்தோடு வெளியூர் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து புகுந்த கொள்ளையர், பீரோவில் இருந்த 50 சவரன் நகை மற்றும் ரூ.5000 கொள்ளையிட்டு சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரில் பந்தநல்லூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.  

நீரில் மூழ்கி ஒருவர் பலி 
தஞ்சாவூர் ஆக.31- புதுச்சேரி மாநிலம் பாரதியார் நகரை சேர்ந்த மார்ட்டின் ஆரோக்கியதாஸ் மகன் ஆலன் இமானுவேல் ஜெகன்(30). இவர் தனது நண்பர்களுடன் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்று விட்டு வேன் மூலம் பூண்டி மாதாகோவிலுக்கு திருவையாறு வழியாக வந்தார். அப்போது தில்லைஸ்தானத்தில் வெள்ளிக்கிழமை வாகனத்தை நிறுத்தி விட்டு காவிரி ஆற்றில் அவர்கள் குளித்தனர். இதில் ஆலன் இமானுவேல் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதன்பின் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இமானுவேல் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து திருவையாறு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

லியோ சங்க துவக்க விழா
கரூர், ஆக.31- எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை சர்வதேச அரிமா சங்கத்தின் இளையோர் கழகம் லியோ சங்க துவக்க விழா நடைபெற்றது. துணை ஆளுநர் லயன்ஸ் சௌமா ராஜரத்தினம், சங்கத்தை துவக்கி வைத்தார். கல்லூரி தாளாளர் ஷி.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், முதல்வர் சாந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பரணி பார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன் பேசினார். இந்தாண்டு லியோ சங்கத் தலைவராக கிருத்திகா, செயலாளராக சம்யுக்தா, பொருளாளராக அபிநயா மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கரூர் சக்தி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் கவிதா கார்த்தீசன், செயலர் சாந்தி லட்சுமி, பொருளாளர் மஞ்சு ரமேஷ், மாவட்ட சேர்மன் லயன்ஸ் ஜெயா பொன்னுவேல், லியோ மாவட்ட சேர்மன் சவரிராஜ் கலந்து கொண்டனர். முன்னாள் ராணுவ வீரர் வினோத் குமாருக்கு மரியாதை செய்யும் வகையில் அவருடைய சகோதரர் பிஜிகுமாருக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டது. லியோ உறுப்பினர்கள் அனைவருக்கும் விதை விநாயகர் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக லியோ சங்கத் தலைவர் கிருத்திகா வரவேற்புரையாற்றினார். செயலர் சம்யுக்தா நன்றி கூறினார்.