tamilnadu

கோயில் இடப்பிரச்சனையில் தாக்குதல்: புகாரில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்  

தஞ்சாவூர், ஜூன் 25- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்திய வரை கைது செய்ய வலியுறுத்தியும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒரத்தநாடு தாலுகா புதூர் ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் சசிகுமார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழரான இவரை, கடந்த 12 ஆம் தேதி கோயில் இடப் பிரச்சனை காரணமாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த சசிகுமார், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். இதுகுறித்து ஒரத்தநாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இந்நிலையில் தாக்குதலில் தொடர்புடைய நபர்களை,  காவல்துறையினர் கைது செய்யாததைக் கண்டித்தும், உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒரத்த நாடு நகரச் செயலாளர் வசந்தகுமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சி.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கண்டன உரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.