தஞ்சாவூர் மே.24- தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வெற்றி பெற்றார். தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 5,88,978 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக வந்த அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் 2,20,849 வாக்குகள் பெற்றார். மூன்றாவதாக வந்த அமமுக வேட்பாளர் பொன்.முருகேசன் 1,02,871 வாக்குகள் பெற்றார். தி.மு.க வேட்பாளர் தனக்கு அடுத்தபடியாக வந்த தமாகா வேட்பாளரை விட 3,68,129 வாக்குகள் கூடுதலாக பெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:- எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக) 5,88,978, என்.ஆர்.நடராஜன் (தமாகா) 2,20,849, பொன்.முருகேசன் (அமமுக) 1,02,871, என்.கிருஷ்ணகுமார் (நாம் தமிழர்) 57,924, சம்பத் ராமதாஸ் (மக்கள் நீதி மய்யம்) 23,477, ஆர்.ஸ்டாலின் (பகுஜன்சமாஜ் கட்சி) 5,856, பனசை அரங்கன் (தேசிய மக்கள் சக்தி கட்சி) 2,041, கே.அப்துல் புகாரி (சுயே) 1,244, கே.எஸ்.சமந்தா (சுயே) 2,643, ஆர்.செல்வராஜ் (சுயே) 28,274, எஸ்.முத்துவேல் (சுயே) 4,509, டி.விஜயகுமார் (சுயே) 5,452, நோட்டா 15,105, மொத்த வாக்குகள் 14,60,266, பதிவான வாக்குகள் 10,59,223.
வாக்கு இயந்திரங்கள் பழுது
தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. இதனால் விவிபேட் இயந்திரத்தின் மூலம் பதிவான ஒப்புகைச் சீட்டு எண்ணி சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை அன்று இரவு 11.15 க்கு பிறகே திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் வெற்றி பெற்றதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள திமுக வேட்பாளரும், முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 6 ஆவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். தஞ்சாவூர் அருகே உள்ள நாட்டாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்(69), தற்போது தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த 1984, 1889, 1991 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன் பின்னர் 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய தேர்தல்களில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றார். 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்குகள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் எண்ணப்பட்டது. இதில் ஆரம்பம் முதலே ஒவ்வொரு சுற்றிலும் பழனிமாணிக்கம் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். இதையடுத்து 21 சுற்றுகளிலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 6- வது முறையாக தஞ்சாவூர் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.