தஞ்சாவூர், செப். 21- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையத்தில், மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் மழை நேரங்களில் பேருந்து நிலைய மாடியிலிருந்து வரும் தண்ணீர், வாய்க்கால் வழியாக செல்லாமல் பேருந்து நிலைய வளாகத்திற்குள் புகுந்து மழைக்கு ஒதுங்கும் பயணிகளின் பொருள்கள் உடைகள் நனையும் நிலை இருந்தது. இது குறித்து பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கம் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து வடிகால் வாய்க்காலை பார்வையிட்ட செயல் அலுவலர் மணிமொழியன், தலைமை எழுத்தர் சிவலிங்கம் ஆகியோர் உடனடியாக பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை வரவழைத்து வாய்க்காலை சுத்தப்படுத்தி தடையின்றி தண்ணீர் செல்வதற்கு வழி செய்தனர். மேலும், பேருந்து நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டப்படும் போது மாடியிலிருந்து வரும் தண்ணீரை வாய்க்கால் வழியாக விடாமல் குழாய் மூலம் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.