தஞ்சாவூர் டிச.17- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட கடைவீதியில், மழைநீர் வடிகால் வாய்க்கால் மெயின் ரோடு கீழ் பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வரை உள்ளது. இதில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் குப்பைகளை கொட்டுவதாலும், கழிவுநீரை விடுவதாலும் தண்ணீர் ஓட வழியின்றி, தேங்கி நின்று துர்நாற்றம் வீசத் தொடங்கியது. மேலும், சேதுசாலை ரயில்வே கேட் பகுதியிலும், அண்ணா சிலை மற்றும் பள்ளிவாசல் எதிரிலும் மழை பெய்யும் போது, முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து, பேராவூரணி நகர வர்த்தகர் சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், செயலாளர் ஏ.டி.எஸ்.குமரேசன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணிமொழியன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் ஆகிய அதிகாரிகளைச் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.தமிழ்வாணன் மேற்பார்வையில், மழைநீர் வடிகால் வாய்க்காலை சீரமைக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். விரைவில் சாலையில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூ ராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே போல், இரண்டு முறை சாலை சீரமைத்தும் மழை காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நின்றவுடன் சாலையை சரி செய்யும் பணி தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.