தஞ்சாவூர்:
கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்த்து, புதிய பயிர்க் கடன்களை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவுறுத்தினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு கடன் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அரசு கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசுகையில், ரேசன் கடைகள் மூலம் கொரோனா நிவாரண நிதி முதல் தவணை எவ்வித புகாருமின்றி வழங்கப்பட்டுவிட்டது. இரண்டாவது தவணை ரூ.2 ஆயிரம் வரும் 15-ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. அதே போல் 14 வகையான பொருட்களும் வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களை பாரபட்சமின்றி உடனடியாக சேர்த்து, அவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பயிர்கடன் வழங்க வேண்டும்.நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசியை வழங்க வேண்டும் என்பது தான் முதல்வரின் விருப்பம். எனவே தரமில்லாத அரிசி விநியோகம் செய்யப்பட்டால், அது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆய்வு செய்து அந்த அரிசியை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.
கடந்த காலங்களில் உறுப்பினர்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் எவ்வாறு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நிகழ்ந்திருந்தால் உடனடியாக உயர் அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.‘கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்கும்’ பின்னர் செய்தியாளர்களிடம் ஐ.பெரியசாமி கூறியதாவது: தமிழகத்தில் இந்தாண்டு விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்கள் சேர்த்து, புதிய கடன் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் விவசாயிகள் செலுத்திய பயிர் காப்பீடு இழப்பீடு தொகை, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கூட்டுறவு வங்கிகளில் 2015-2016ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட கடன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை மூன்று தவணைகளில் கட்ட முன்பு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கடன் தள்ளுபடியில் இந்த கடன் தொகை விடுபட்டுள்ளதாக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக் கடன்கள் குறித்து அங்குள்ள அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் கடன் தள்ளுபடி, நகைக்கடன்கள், பொறுப்புகள், சொத்துக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். அதற்கு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஆட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இருக்கக்கூடியவர்கள் மீது நிறைய புகார்கள் வந்துள்ளது அந்த புகார்களை முறையாக ஆய்வு செய்து விசாரித்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கலைத்துவிட்டு புதியதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்கும்.
கூட்டுறவு சங்கங்களின் நிதியாதாரம் நன்றாக உள்ளது. 23 மத்திய கூட்டுறவு சங்கங்களும் லாபத்தில் இயங்கி வருகிறது. அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ரூ.60 ஆயிரம் கோடி இருப்பு உள்ளது. எங்காவது குறைகள் இருந்தாலும் அவையும் சரி செய்யப்படும்.
யாருடைய பரிந்துரையும் இன்றி கட்சிப் பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே சிறு - குறு விவசாயிகள் யார் கடன் கேட்டு வந்தாலும், கூட்டுறவு வங்கிகளில் அந்த விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை பாக்கி இருப்பது குறித்து வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருக்கும் பாக்கியை, கலைஞர் முதலமைச்சராக இருந்த போது வழங்கியது போல, தளபதியும் வழங்குவார்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கூட்டுறவு சங்க மாநில பதிவாளர், மூன்று மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்க அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.