திருவாரூர்- காரைக்குடி ரயில் பயண நேரம் குறைப்பு
தஞ்சாவூர் ஜூலை.12- திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தின் டெமு ரயில் பயண நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் 6 பெட்டிகளுடன் இயங்கி வந்த டெமு ரயில், கடந்த (ஜூன் 25) முதல் தினசரி 3 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் கேட் கீப்பர்கள் இல்லாததால், மொபைல் கேட் கீப்பர்கள் மூலம் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், திருவாரூரிலிருந்து காரைக்குடி செல்வதற்கு, பயண நேரம் சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலானது. இதனால், ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. இந்நிலையில், திருவாரூரிலிருந்து(வண்டி எண்: 06847) காலை 8.15 மணிக்கு ரயில் புறப்படும் போது, காரைக்குடியிலிருந்து(வண்டி எண்: 06848) 3 பெட்டிகளுடன் காலை 10.30 மணிக்கு ரயில் புறப்படும். இரண்டும், பேராவூரணியில் சந்தித்துக் கொண்டபின், தங்கள் நிலையங்களுக்குச் செல்லும். பின்னர் மறுநாள், இதேபோல் திருவாரூர் மற்றும் காரைக்குடியிலிருந்து ரயில் சேவை நடைபெறும். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருவாரூரிலிருந்து (வண்டி எண்: 06847) காரைக்குடிக்கு மாலை 3.15 மணிக்கு செல்லும் ரயிலானது, அங்கிருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காரைக்குடியிலிருந்து (வண்டி எண்: 06848) திருவாரூருக்கு மாலை 5.30 மணிக்கு சென்றடையும். இதன்மூலம் தினசரி ரயில் சேவையை, இரு மார்க்கத்திலும் பெற முடியும். இந்த மாற்றம் ஜூலை 13 முதல் நடைமுறைக்கு வர இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூரிலிருந்து காரைக்குடி செல்வதற்கு சுமார் 7 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்சாரம் தாக்கி மாணவர் பலி
தஞ்சாவூர் ஜூலை.12- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் விவசாயி. இவருடைய மகன் பிரவீன்குமார்(19). தஞ்சாவூரில் கல்லூரியில் படித்து வந்தார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்த துலுக்கவிடுதி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து கல்லூரி சென்று வந்தார். இரு தினங்களுக்கு முன்பு காற்றில் சாய்ந்த ப்ளக்ஸ் பேனரை, நண்பர்களோடு சேர்ந்து, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது மேலே சென்ற மின்கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மாணவர் பிரவீன் குமார் பலியானார். இதுகுறித்த புகாரில் திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை மிரட்டல்: இருவருக்கு சிறை
புதுக்கோட்டை, ஜூலை 12- புதுக்கோட்டை மலையப்பன் நகரை சேர்ந்த சுப்பையா மகன்கள் செல்வம், பாலமுருகன். இவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த வீரையன் என்பவரை சாதி பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வீரையன் புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்து செல்வம், பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் வியாழக்கிழமை தீர்ப்பு கூறினார். இதில், வீரையனை சாதி பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள் செல்வம், பாலமுருகன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.