தஞ்சாவூர் செப்.1- தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு ஆண்டு பேரவை சனிக்கிழமை பேராவூரணியில் நடைபெற்றது. வீ.கருப்பையா தலைமை வகித்தார். ஆர்.எஸ்.வேலுச்சாமி முன்னிலை வகித்தார். தென்னை விவசாயிகள் சங்கம் ஆர்.சி.பழனிவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவராக தமிழ்நேசன், ஒன்றியச் செயலாளராக வீ.கருப்பையா, பொருளாளராக ரவீந்திரன், துணைத்தலைவராக வி.நீலகண்டன், துணைச் செயலாளராக லெனின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்களையும், காவிரி நீரைக் கொண்டு நிரப்பி, இந்த ஆண்டு ஒரு போகம் சாகுபடியாவது நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மணக்காடு, பெருமகளூர், ஊமத்தநாடு, விளங்குளம், கொரட்டூர் ஏரிகளில் தண்ணீர் நிரப்பித் தர வேண்டும். கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், விவசாய கடன்கள் எளிதாக கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். குடி மராமத்து பணிகளை முறைகேடின்றி, விவசாயிகள் கொண்ட குழு அமைத்து முறையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.