தஞ்சாவூர், பிப்.24- குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தஞ்சாவூர் கீழவாசல் பள்ளிவாசல் அருகில் 10 ஆவது நாளாக இஸ்லாமியர்கள் காத்திருப்பு மற்றும் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. இதற்காக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று கோரிக்கைகளை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ சிறுபான்மை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான சட்டத்தை மத்திய பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. தனது சொந்த மக்களையே அகதிகளாக்கும் பாசிச ஆட்சி நடந்து வருகிறது. உரிமைக்கான போராட்டங்கள் நசுக்கப்படுகிறது. ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி என்னும் கோட்பாட்டை, அமலாக்க துடிக்கின்றனர். பன்முகத் தன்மை கொண்ட நமது தேசத்தில், வேற்றுமையில் ஒற்றுமை காணும் உயர்ந்த கலாச்சாரத்தை சீரழிக்கும் போக்கு காணப்படுகிறது. சுதந்திரத்திற்காக சாதி, மதம் பாராமல் போராடியவர்களின், தேசபக்தி குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. இதில் வேதனையான அம்சம் என்னவெனில், சுதந்திர போராட்டத்தில் எள்ளளவும், எள் முனையளவும் பங்கு பெறாதவர்கள் தேசபக்தி குறித்து பேசுகின்றனர். உரிமைகளுக்கான மக்களின் உணர்ச்சி மிகுந்த இப்போராட்டத்தில் தோள் கொடுக்கும் தோழனாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போராடும்” என்றார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சை மாநகர நிர்வாகி அப்துல் நசீர் ஆகியோர் உடனிருந்தனர். அனைவரையும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல்லா வரவேற்றார்.