தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சுற்று வட்டாரப் பகுதியில் தேங்காய் விலை சரிவால் தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, மதுக்கூர், ஒரத்தநாடு, அதிராம்பட்டினம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் தேங்காய் உலகளவில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகம் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் டெல்டா விவசாயிகளுக்கு நெல்லுக்கு அடுத்து இரண்டாவது வாழ்வாதாரமாக விளங்கி வரும் தென்னை சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பேராவூரணி பகுதியில் சாகுபடி செய்யப்படும் தேங்காய்கள், அளவு, சுவை, மணம் போன்றவை மூலம் பெயர் பெற்றுள்ளது. இதன்காரணமாக உலகளவில் விரும்பப்படும்இப்பகுதி தேங்காய், புகழ்பெற்ற பிஸ்கட் கம்பெனிகளின் தயாரிப்புகளுக்கு விருப்பமாக உள்ளது. இப்படி பெயர் பெற்ற தேங்காய் ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் காங்கேயம், வெள்ளக்கோயில் போன்ற வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதியாகி வந்தது.
இந்நிலையில், விலை முன் எப்போதும் இல்லாத அளவு கடந்த 2017-18 ஆண்டு தேங்காய் விலை கிடுகிடுஎன உயர்ந்து 25 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு விற்பனையானது. அதே சமயம் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர்16 அன்று வீசிய கஜா புயல்,பேராவூரணி பகுதியில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த பல லட்சக்கணக்கான தென்னை மரங்களை வேரோடுசாய்த்தது. புயலில் தப்பி நின்ற தென்னை மரங்களிலும், தேங்காய் குலைகளின் காம்புபகுதி காற்றின் வேகத்தில் அசைத்து சென்றதால், புயலுக்கு பின் மிகக் குறைந்த அளவே வெட்டப்படும் தேங்காய்கள் எண்ணெய் சத்து இன்றி, எடை குறைந்து, தரம் குறைந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியின்றி போனது. வியாபாரிகளும் விரும்பி கொள்முதல் செய்யவில்லை.
இதனால் விலை சரிந்து கடந்த 20 மாதங்களாக10 முதல் 12 ரூபாய்க்கு விற்பனை யானது. தேங்காய் உற்பத்தியும் குறைந்தது. போதுமான விலையும் கிடைக்கவில்லை. வருமானமின்றி கடைமடை தென்னை விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தனர்.இதுகுறித்து மருங்கப்பள்ளம் தென்னை விவசாயி இ.வீ.காந்தி கூறுகையில், கடந்த 20 மாதங்களாக தென்னை விவசாயிகளின் கடும் உழைப்பால் தப்பி நின்ற தென்னை மரங்களில் எண்ணெய் சத்து மற்றும் எடையுடன் கூடிய தேங்காயை உற்பத்தி செய்தனர். உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் தென்னை விவசாயிகளுக்கு சோதனை காலமாக மாறியது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வால் வெளிநாடு,வெளிமாநிலம், வெளிமாவட்டங் களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு பின் 10 ரூபாய் விற்ற தேங்காய் கடந்த இரண்டுமாதங்களாக கிடுகிடுவென உயர்ந்து 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனையானது. 2 ஆண்டுகளுக்கு பின் தேங்காய்விலை ஏறிய வேகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக கிடுகிடுவென சரிந்து 10 ரூபாய் முதல் 12 ரூபாயாக குறைந்துள்ளது. விலை சரிவால் பேராவூரணி பகுதி தென்னை விவசாயிகள் மிகுந்த கவலையடைந்து உள்ளனர்” என்றார்.