tamilnadu

குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை 

 தஞ்சாவூர், ஆக.20- காவிரிக் கோட்டம் கோணக்கருங்கலான் பிரிவு பூவரசன் வாய்க்காலில் குடிமராமத்துப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு எம்.ராம் மற்றும் வரகூர் பூவரசன் வாய்க்கால் விவசாயிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “காவிரிக் கோட்டம், கோணக் கருங்கலான் பிரிவு பூவரசன் வாய்க்கால் 5 கிமீ தூரத்துக்கு, 5 கிராம விவசாயிகளுக்கு சுமார் 1,000 ஏக்கர் நீராதாரம் பெற உதவியாக, கடந்த 2018ஆம் ஆண்டு அரசால் ரூ17 லட்சம் செலவில் குடிமராமத்துப் பணியில் சீர் செய்ய உத்தரவிடப் பட்டு பணிகள் துவங்கின. ஆனால் பணிகள் முழுமை பெறா மல் 25 சதவீத பணி மட்டுமே நடைபெற்று, இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் 5 கி.மீ தூர வாய்க்கால் அரைகுறையாக தூர்வாரப்பட்டது. மேடு, திட்டுகள், அப்படியே உள்ளது. அதனை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். ஒன்பத்து வேலி கிராம பகுதியில் அமைந்துள்ள வாய்க்காலின் தலை மதகு, அதனைத் தொடர்ந்து சுமார் 1 கிமீ தூரத்திற்கு கரை பலவீனமாக உள்ளது. அதனை சீர்படுத்த வேண்டும். வாய்க்கால் நெடுகிலும் காங்கிரீட் நீர்த்தேக்கிகள், அனைத்தும் கடந்த தூர்வாரும் பணிகளின் போது அப்புறப்படுத்தப்பட்டது.  நீரை தேக்கிப் பாய்ச்ச, நீர் தேக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். ரூ17 லட்சம் ஒதுக்கப்பட்டதில் ரூ6.5 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டு மீதம் 10.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட வில்லை. இந்த பாசன குறைபாடுகளை முழுமையாக சீர் செய்து பாசன நீர் எங்களுக்கு கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.