கும்பகோணம்:
கிராமப்புறங்கள், நகர்ப்புறமாக விரிவாக்கம் செய்யும் போது நகர்ப்புற வேலைவாய்ப்பிற்கு ஒன்றிய, மாநில அரசுகள் அதிகப்படியான தொகை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெள்ளியன்று கும்பகோணம் அருகேயுள்ள புளியம்பாடி கிராமத்திற்கு வருகைதந்த மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப் போது அவர் கூறியதாவது:
தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றுபரவலை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், 3 ஆம் அலை வந்தாலும் அதனை எதிர் கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற நூறு நாட்களில், மகளிருக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, நகர பேருந்தில் இலவசபயணம் செய்ய அனுமதி அளித்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறினார்.
அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் வரைஅகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கும் முடிவினை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதேபோல் ஆசிரியர் பணியிடங்களிலும், அரசின் பல்வேறு துறைகளிலும் ஒப்பந்த பணியாளர்களாக உள்ளவர்கள்,குறைவான ஊதியம் பெற்று வருகிறார்கள், இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் தமிழகத்தில் நடைமுறைப் படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. இன்னமும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளதை அனுமதிக்க முடியாது என்றும் இது தொடர்பாக அரசுடன் ஒத்துழைக்க அனைத்து தரப்பினரும் முன் வர வேண்டும். கேரள மாநிலத்தில் இத்திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தும்போது, கிராமங்கள், நகர்ப்புறங்களாக விரிவாக்கம் செய்யும் பொழுது, அந்த பகுதிகளில்கிராமப்புற வேலை வாய்ப்பு இல்லாமல் போகும் நிலையில், நகர்ப்புற வேலை உறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டினை ஒன்றிய, மாநில அரசுகள் உயர்த்தி வழங்கிடவேண்டும், தற்போது இதற்காக தமிழக அரசுரூபாய் நூறு கோடி ஒதுக்கீடு செய்திருப்பதுவரவேற்கத்தக்கது என்றும் கே.பாலகிருஷ் ணன் மேலும் தெரிவித்தார்.