tamilnadu

பட்டுக்கோட்டையில் 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் பாலிஷ் செய்து விற்பனை செய்தவர் கைது

தஞ்சாவூர் ஜூன்.18- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் பெரியசாமி (46) என்பவருக்கு சொந்தமான அரிசிக் கடையில் கள்ளத்தனமாக ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து, அதனை பாலிஷ் செய்து வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதன்கிழமை மதியம் அங்கு சென்ற பட்டுக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான தனிப்படையினர்  பெரியசாமியுன் அரிசிக் கடையில் சோதனை செய்தனர். அரிசிக் கடையில் 50 கிலோ எடையாக இருந்த 110 மூட்டைகளில், சுமார் 5 டன் ரேஷன் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு, இரண்டு வாகனங்களில் ஏற்றி அடக்கப்பட்டு, புறப்படுவதற்கு தயாராக தார்பாய்கள் போட்டு மூடப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை காவலர்கள் 5 டன் ரேஷன் அரிசி மற்றும் அதனை ஏற்றியிருந்த  இரண்டு லோடு வேன்களையும் பறிமுதல் செய்ததோடு, கடை உரிமையாளர் பெரியசாமியையும் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ஒரு லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.  பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், பணம் மற்றும் கைது செய்யப்பட்ட பெரியசாமியை தஞ்சாவூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் கோகுல கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டு,  விசாரணை நடைபெற்று வருகிறது.