ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் தாய்கட்ஸு என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து ஜப்பானின் அயா ஒஹோரியை 11-21, 21-10, 21-13 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துடன் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரனீத், ஜப்பானின் கன்டாவை 21-13, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் இந்தோனேசியாவின் டாம்மி சுகியர்டோவை எதிர்கொள்கிறார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராங்கிரெட்டி - சிராக்செட்டி ஜோடி 15-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் சீனாவின் கய் ஸியாங் - லியு ஜெங் ஜோடியை புரட்டியெடுத்து காலிறுதிக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் இந்திய ஜோடிகள் ஏற்கெனவே வெளியேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.