கிராண்ட்ஸ் லாம் டென் னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்தி ரேலிய ஓபன் டென் னிஸ் தொடரில் தற்போது 3-வது சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் வெள்ளியன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தரவரிசையில் இல்லாத ஜப்பானின் நிஷிகோவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். தரவரிசை இல்லாமல் களமிறங்கிய முன்னணி நட்சத்திரம் மரின் சிலிக் (குரோஷியா), 9-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் பவுட்டிஸ்டா அகுட்டை 6-7(3-7), 6-4, 6-0, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்து டன் வெற்றியை ருசித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்கர்களான சான்ட்கிரன், பால் மற்றும் அர்ஜெண்டினாவின் தியேகோ ஆகியோரும் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். மகளிர் ஒற்றையர் ஆடவர் பிரிவில் முன்னணி வீரர்கள் சொதப்பலின்றி விளையாடி 4-வது சுற்றுக்கு முன்னேறி வரும் நிலையில், மகளிர் பிரிவில் நட்சத்திர வீராங்கனைகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். பட்டம் வெல்லும் நபராக கருதப்பட்ட அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சீன வீராங்கனை வாங் குயாங்கிடம் 4-6, 7-6 (7-2), 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேறினார். இதே போல முன்னணி நட்சத்திரம் டென்மார்க்கின் வொஸ்னியாக்கி தரவரிசை பின்புலம் இல்லாத துனிசியாவின் ஜபேரிடம் 5-7, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். முதல் நிலை வீராங்கனை ஆஸ்திரேலியாவின் பார்டி கஜகஸ்தானின் எலினாவை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் புரட்டியெடுத்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மேலும் செக்குடியரசின் கிவிடோவா, கிரீஸின் சக்கரி ஆகியோர் சிரமமின்றி 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.