சீனாவின் முக்கிய நகரான சாங்ஜோ நகரில் விக்டர் ஓபன் என்ற பெயரில் சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
மகளிர் ஒற்றையர்
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் நடப்பாண்டின் உலக சாம்பியனும், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளவருமான இந்தியாவின் தங்க மங்கை பி.வி. சிந்து, தரவரிசையில் இல்லாத (தொடரில் மட்டும்) தாய்லாந்தின் பொம்பாவீயை எதிர்கொண்டார். “நான் உலக சாம்பியன். தரவரிசையில் இல்லாத பொம்பாவீ தன்னை என்ன செய்துவிடுவார்” என்ற மனநிலையில் களமிறங்கிய பி.வி.சிந்து முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டையும் சிந்து விரைவாகக் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் உத்வேகம் பெற்ற பொம்பாவீ 2-வது செட்டை 21-13 என்ற கணக்கில் கைப்பற்றி சிந்துவிற்குப் பதிலடி கொடுத்தார். வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவிக்க ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. இறுதியில் தாய்லாந்து வீராங்கனை பொம்பாவீ கடைசி செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி, 12-21, 21-13, 21-19 என்ற செட் கணக்கில் சிந்துவை புரட்டியெடுத்து காலிறுதிக்கு முன்னேறி பேட்மிண்டன் உலகை மிரட்டியுள்ளார். சிந்துவின் தோல்விக்கு உலக சாம்பியன் என்ற செருக்கான மனநிலை கலந்த ஆட்டம் தான் முதல் காரணம். முதல் செட்டிலிருந்தே சிந்து அசமந்தமாக அசால்ட்டாக விளையாடினார். இதுதான் அவரது அதிர்ச்சி தோல்விக்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் இரட்டையர்
ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி, ஜப்பானின் காமுரா - கெய்கோ ஜோடியிடம் 19-21, 8-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தாய்நாடு திரும்ப ஆயத்தமாகியுள்ளது.
கலப்பு இரட்டையர்
கலப்பு இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ராங்கி - அஸ்வினி ஜோடி ஜப்பானின் கனிகோ - மிஸாகி ஜோடியிடம் 11-21, 21-16, 12-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறியது.
சீன ஓபன் தொடரில் இந்திய வீரர் - வீராங்கனைகள் அடுத்தடுத்து வெளியேறுவதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்து ள்ளனர்.