பெங்களூரு,செப்.11- கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 68,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். மற்றும் கபினி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 38,000 கன அடி வீதமும், கபினியில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் நீர் பாய்கிறது. ஏற்கெனவே திறக்கப்பட்டதையும் சேர்த்து தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லிலும் இதே அளவு நீர் பாய்வதால், அங்கு குளிக்கவும், பரிசல் ஓட்டவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 68,000 கன அடியாக நீர்வரத்து உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 65,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாயில் இருந்து விநாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120.740 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 94.65 டி.எம்.சி.யாக உள்ளது.