விருதுநகர், நவ.22- தமிழக அரசு உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்பப் பெறுவதாக அறிவித்துவிட்டது. அறிவித்து இரண்டு நாட்களாகியும் பழைய சொத்து வரி நடைமுறைக்கு வரவில்லை. வரி செலுத்த நகராட்சி அலுவலகங்களுக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில், தமிழக அரசு ஏற்கனவே, சொத்து வரியை 50 சதவீதமும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான வரியை 100 சதவீதமும் உயர்த்தியது. இத்துடன் குறைந்தபட்சம் வீடு ஒன்றுக்கு மாதம் ரூ.30 முதல் அதிக பட்சமாக ரூ.100 வரை குப்பை வரியும் விதித்தது.
இந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திடீரென உயர்த்தப்பட் ட சொத்து வரியை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, மக்கள் நகராட்சி அலுவலகங்களுக்கு சென்று தங்களது பழைய சொத்து வரியை செலுத்தச் சென்றனர்.
ஆனால், அங்கு பணம் செலுத்தும் இடத்தில் உள்ள கணினியில் பணம் பெறுவதற்கான சர்வர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சர்வர் எப்போது சரியாகும் என அங்குள்ள ஊழியர்களுக்கும் அறிவிக்கப்படவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். முறையான முன் ஏற்பாடுகள் ஏதுமின்றி உள்ளாட்சித் தேர்தலை மட்டுமே மனதில் கொண்டு இது போன்ற அதிரடியான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால், ஊழியர்களும், மக்களுமே கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, மூன்றாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத நிலையில், மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. இதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில நிதி ஆணையத்திடம் இருந்து மாதந்தோறும் வரும் நிதி கணிசமாக குறைக்கப்பட்டது. பல நகராட்சிகளில் இரண்டு முதல் மூன்று மாதம் வரை ஊதிய பாக்கி உள்ளது. எனவே, நகராட்சி ஊழியர்கள் ஊதியம் வழங்க கோரி போராட்டங்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்கள் சிரமமின்றி ஊதியம் பெற மாநில நிதி ஆணையத்தில் இருந்து கூடுதலாக நிதி வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
(ந.நி.)