தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 488 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,823 பதவியிடங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. அதன்படி இன்று (பிப்.19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த வாக்குப்பதிவில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதில் மாலை 5 மணிவரை வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மாலை 5 மணிக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு வாக்களிக்க அனுமதித்தனர்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதன்பின்னர் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.