“தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்” - என்றான் பாரதி
1994ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாய், ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான ஆர்கனைசர்-க்கு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் “இந்தியா இந்துக்கள் நாடு, நாங்கள் இந்தியாவில் இந்து ராஷ்டிரம் அமைத்து ஆட்சி செயல்படும் போது, இந்தியாவில் இந்துக்கள் மட்டும் தான்இருப்பார்கள், முஸ்லிம்கள் அரேபிய நாடுகளுக்கு சென்றுவிட வேண்டும், அது போல கிருஸ்துவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று விட வேண்டும். அப்படி அவர்கள் போகவில்லையானால் (We will force the to quit) அவர்களை வெளியேற வைக்க எங்கள் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்துவோம்” என்று எழுதினார். மேலும் எங்களது இந்துத்துவா அரசு சதுர்வர்ண கொள்கை அடிப்படையில் தான் செயல்படும் என தெளிவுபட எழுதியிருந்தார்.
அதனைத்தான் தற்போதைய பாஜக ஆட்சியாளர்கள் மிகவும் தீவிரமாக அமல்படுத்தி வருகிறார்கள். தற்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தற்போதையபிஜேபி ஆட்சியில் இந்துத்துவா கொள்கையை எப்படி அமல்படுத்துவது என முடிவு செய்தோம் என கூறினார். அவர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தில்லியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்-ன் National Exicutive committee கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களுக்கு செய்திதருகிற போது, அவர் கூறியதாவது: 2014ஆம் ஆண்டு ஜூன்மாதம் ராஞ்சியில் எங்களது முந்தைய தேசிய நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 2014ல் நாடாளுமன்றதேர்தல் நடைபெற்று மோடி தலைமையில் ஆட்சி அமைத்த பிறகு இந்த ஆட்சி எப்படி செயல்பட வேண்டுமென முடிவு செய்தோம். அதில் முக்கியமாக ஒன்று, இந்துத்துவா கொள்கையை கார்ப்பரேட் நிர்வாகங்களின் கூட்டுறவில் அமல்படுத்துவது.
இரண்டாவது இந்த முடிவை அமல்படுத்துவதற்கு ஆட்சித்தலைவர் என்கிற வகையில் பிரதமர் மோடி அவர்களையும், பாஜக கட்சி தலைவர் என்கிற வகையில்அமித்ஷா அவர்களையும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலிருந்து எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி செயல்பட முடிவு செய்தோம். இந்த கூட்டத்தில் கடந்த 5 வருட பாஜகஅரசு மற்றும் பாஜக கட்சி செயல்பாடுகள் குறித்து பரிசீலித்த போது அவைகளின் செயல்பாடுகள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. தற்போது 2019 நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இப்போது இந்தியாவில், வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் கடன் பிரச்சனை, கடும் வறட்சி போன்ற பல பிரச்சனைகள் முன்னுக்கு உள்ளது. ஆகவே இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தேர்தல் பிரச்சாரத்தை பலப்படுத்த முடிவு செய்தோம் என கூறினார்.
அதன்படியே வெறுப்பு அரசியலை, பிளவு அரசியலை ஆயுதமாக பயன்படுத்தி மீண்டும் பல வெற்று வாக்குறுதிகளை அளித்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தனர். தற்போது அசுரத்தனமாக கார்ப்பரேட் நிர்வாகங்களோடு கைகோர்த்து செயல்பட்டு வருகிறார்கள். முதல்கட்டமாக இஸ்லாமிய மக்களை நாடற்றவர்களாக ஆக்கி அவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற(CCA) குடியுரிமை சட்டத்தில் திருத்தம் (NCR) தேசிய குடியுரிமை பதிவேட்டில் பெயர் இடம் பெற வேண்டும். இதன் மூலம் என்.ஆர்.சி தேசிய குடியுரிமை சான்றிதழ் பெற வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற நிலையை எடுத்தனர். அதன் பிறகு ரயில்வே துறை, விமானத்துறை, சாலைபோக்குவரத்து போன்றவைகளை கார்ப்பரேட்டுகளுக்கு விட முடிவு செய்தனர். தற்போது வேளாண்துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளை கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிட மிக அவசரமாக சட்டமாக்கி உள்ளனர். இவைகளால் முதலில் வேளாண் சாகுபடியே ஆகப்பெரும்பான்மையாக கார்ப்பரேட் முதலாளிகளே செய்வார்கள், கார்ப்பரேட் முதலாளிகளே லட்சோபலட்சம் ஏக்கர்களை நேரடியாக சாகுபடி செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் அவர்கள் காண்டிராக்ட் சாகுபடி மூலம் விவசாயிகள் நிலங்களை சாகுபடி செய்ய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக அத்தியாவசிய வேளாண் பொருட்களான உணவு தானியங்கள், பருப்பு வகைகள், வெங்காயம் போன்றவை கார்ப்பரேட் நிர்வாகங்கள் கொள்முதல்செய்திட, வினியோகம் செய்திட உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலான ஏழை, சிறு, குறு, நடுத்தர ஏன் பணக்கான விவசாயிகளை கூட விவசாயத்திலிருந்து வெளியேற்றச் செய்யும் கொடூரமான நடவடிக்கையாகும். மூன்றாவதாக வேளாண் நடவடிக்கை முழுவதும் நவீன இயந்திரமயமாக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விவசாயத் தொழிலாளர்கள் முற்றிலும் விவசாயத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். ஏழை, சிறு, நடுத்தர விவசாயிகள் மிகப்பெரிய செலவு செய்து விவசாயம் செய்ய முடியாது. அவர்களும் நிலங்களை விற்றுவிட்டு தொழிலாளர்களாவார்கள். ஆகவே தான் 200க்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்கள், அகில இந்தியவிவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா (சிபிஎம்), இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அதுல்குமார் அஞ்சான் (சிபிஐ) ஆகியோர் தலைமையில் தலைநகர் தில்லியில் கூடி முடிவு செய்து செப்டம்பர் மாதத்தில் ஒரு வார காலம் நாடு தழுவியகண்டன போராட்டங்களை நடத்திட முடிவு செய்து அறிவித்தனர். இதையடுத்து “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்கிற பாரதியின் கூற்றுப்படி இன்று நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்டு, இந்தியாவில், வரலாறு இதுவரை காணாத போராட்டம் நடத்திட 200 அமைப்புகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்திலும் அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைந்து அணிதிரட்டி, அப்பாவி ஏழை விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பலிகடா ஆக்கும் பாஜக ஆட்சியின் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் விரோத அராஜக நடவடிக்கைகளை முறியடிப்போம். மக்களை காப்போம். தேசத்தைக் காப்போம்.
கட்டுரையாளர் : எஸ்.திருநாவுக்கரசு, முன்னாள் அ.இ.தலைவர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்