tamilnadu

img

‘ஆட்டம்’ காணும் ஆணிவேர்! - சி.ஸ்ரீராமுலு

“அதிகாரம் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளப்பட்டாலன்றி  மக்களாட்சியை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. அதிகாரம் சராசரி கூலியிடமும், தாழ்த்தப்பட்டவரிடமும், பிற நலிவுற்ற பிரிவினரிடமும் கூட பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்”.

-காந்தியடிகள்

வேளாண்மையை சார்ந்தே தோன்றிய இந்திய நாகரிகத்தில் பஞ்சாயத்து அமைப்புகள் நீண்ட காலமாகவே சுயாட்சி பெற்றவைகளாக விளங்கி வருகின்றன. மக்கள் ஒரு சமுதாய அமைப்பாக பல இடங்களில் குழுக்களாக குடியேறி வாழ்ந்து வந்தார்கள். மன்னருக்கு செலுத்த வேண்டிய வரியை ஒரு அமைப்புதான் மக்களிடம் வசூல் செய்திருக்கிறது. இவ்வமைப்பு தான் காலப்போக்கில் ‘பஞ்சாயத்து’ என்று மாறியிருக்கிறது.  நாடு விடுதலை அடைந்த பிறகு எத்தகைய அரசியலமைப்பு முறை நமக்கு தேவை என்பதை தீர்மானிக்க ராஜேந்திர பிரசாத் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த சட்ட வரைவுக் குழுவுக்கு தலைமைப்பொறுப்பேற்றிருந்தார் அம்பேத்கர். நமக்கு உகந்த அரசியலமைப்பை தேர்வு செய்யும் போது இரண்டு விதமான கருத்துக்கள் முன்னுக்கு வந்தபோது, கிராமங்களை மையமாகக் கொண்ட அரசியலமைப்பு முறைக்கு அம்பேத்கர் கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார். அதற்கு காரணம், அன்றைய காலக்கட்டத்தில் கிராமங்களில் சாதீய முறையும், வர்ணாசிரமக் கோட்பாடுகளும் ஆழமாக வேரூன்றியிருந்ததால் மேல்தட்டு மக்கள் மட்டுமே அதிகாரம் பெறுவார்கள். தாழ்த்தப்பட்ட, பின்தங்கியவர்களுக்கு உண்மையான சமூக நீதி கிடைக்காது என்பதாகும்.

1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது நமது வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாகும். அதில், பஞ்சாயத்துகள் குறித்து ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பிறகு, நடந்த விவாதத்தைத் தொடர்ந்து மாநிலங்கள் கிராம ஊராட்சி அமைப்புகளை ஏற்படுத்தி சுயாட்சி அமைப்புகளாக செயல்பட தேவையான அதிகாரங்களை வழங்கலாம் என்று வழிகாட்டும் நெறிமுறைகள் உட்கூறு பிரிவு 40  உருவாக்கப்பட்டது. ஆனாலும், இது கட்டாயமாக்கப்படவில்லை. அனைத்து மாநிலங்களும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டது. பிறகுதான், பஞ்சாயத்துக்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் கிராம பஞ்சாயத்துகள் சட்டம் 1950-ல் இயற்றப்பட்டது.  இதன்படி மக்கள் தொகை 500க்கும் அதிகமாக இருந்தால் கிராம பஞ்சாயத்துகளாக மாற்றியமைக்க ‘மதராஸ் கிராம பஞ்சாயத்து’ சட்டம் வழிவகுத்தது. இதற்கும் முன்பு, 1920ஆம் ஆண்டு சென்னை கிராம பஞ்சாயத்து சட்டம் (லோக்கல் போர்டு) கொண்டு வரப்பட்டது. அதன்படி 25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. பிறகு 1930 ஆம்  ஆண்டு இது ரத்து செய்யப்பட்டு மதராஸ் லோக்கல் சட்டமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் 1950 ஆம் ஆண்டு இந்த சட்டம் ‘மதராஸ் ஜில்லா போர்டு’ என திருத்தம் செய்யப்பட்டது.

கம்யூனிஸ்டுகளே முன்னோடி...

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பஞ்சாயத்து அரசாங்கம் அமைத்தபோதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்த மேற்கு வங்கம், கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் இடது முன்னணி அரசுகள் மட்டுமே பிரிவு 40 கூற்றுப்படி பஞ்சாயத்து அரசுகளை மிகச் சிறப்பான முறையில் ஏற்படுத்தி நாட்டிற்கே வழிகாட்டியது. இத்தகைய முயற்சிகளால் அந்த இரு மாநிலங்களில் மக்களின் சமூக வளர்ச்சியும், பொருளாதாரமும் முன்னேற்றம் ஏற்பட்டதை யாராலும், மறுக்க  முடியாது. இந்திய விடுதலைக்கு  முன்பு, ஆங்கிலேயர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் பஞ்சாயத்து அமைப்புகளை வலுப்படுத்த முயற்சிகள் எடுத்தாலும் கிராமப்புறத்தில் மேல்தட்டு மக்கள் மட்டுமே பங்கு பெறும் சூழல் இருந்தது. (அம்பேத்கர் சொன்னது நினைவு படுத்திக் கொள்ளவும்) உண்மையான நேரடி ஜனநாயக முறை பின்பற்றப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களும் நிலையானதாக இல்லை. எப்போது வேண்டுமானாலும் ஆட்சியாளர்களால் திரும்பப் பெறும் வாய்ப்பும் இருந்தது.

சுதந்திரத்திற்குப் பிறகும் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வகையான பஞ்சாயத்து அமைப்பு முறைகளை பின்பற்றின. ஆனாலும் அடிப்படைத் தத்துவமான கிராம அளவில் நிர்வாக மையங்களை ஏற்படுத்துவது, அனைத்து வாக்காளர்களையும் பங்கேற்கச் செய்வது, நீதி- நிர்வாக பணிகளை செய்வது போன்ற தலையாய பணிகளில் பெரிய மாற்றத்தை காண முடியவில்லை. 1975-க்குப்பின் மத்தியில் ஜனதா கட்சி அரசு அமைந்த பின்னர் பல்வந்த்ராய் மேத்தா (1976), அசோக் மேத்தா (1977) ஆகிய இரு குழுக்கள் அமைக்கப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 

மாவட்ட பஞ்சாயத்து, மண்டல பஞ்சாயத்து என இரண்டு அடுக்கு முறை, அரசியல் கட்சிகள் தேர்தலில் பங்கேற்கலாம், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரம் முழுவதும் பஞ்சாயத்துக்கு மாற்ற வேண்டும். பஞ்சாயத்து அரசாங்கத்திற்கு என்று மாநில அளவில் ஓர் அமைச்சர் நியமிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றெல்லாம் அசோக் மேத்தா கமிட்டி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியது. இதை நடைமுறைக்கு கொண்டு வரும் தருணத்தில் ‘ஜனதா அரசாங்கம்’ கவிழ்க்கப்பட்டதால் பஞ்சாயத்து அரசாங்கம் கைக்கு எட்டாக் கனியானது.

புது ரத்தம் பாய்ச்சல்...

கிராம பஞ்சாயத்தின் ஆணிவேரை அறுத்தெறிந்து விட்டு, உச்சி மரம் வான் தொட்டு வளரும் என்றெண்ணுவது போல், அடிநிலை மக்கள் அமைப்பை முடக்கி, தேசத்தில் ஜனநாயகம் வளரும், பொருளாதார சமூக சீர்திருத்தம் நிகழும் என்பது தவறான  போக்கு என்பதை 1985 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் நாடு உணரத் தொடங்கியது. 1987 ஆம் ஆண்டு, மக்களாட்சி வளர்ச்சிக்கும் பஞ்சாயத்து அரசாங்கங்களை மறுசீரமைக்கவும் அன்றைய காங்கிரஸ் அரசாங்கம்  எல்.எம். சிங் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. பஞ்சாயத்து அரசாங்கங்கள்  அரசியலமைப்புச் சட்டத்தால் முறையாக, முழுமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும். நேரடி ஜனநாயகத்தின் வெளிப்பாடாக ‘கிராமசபை’ அங்கீகரிக்கப்பட வேண்டும். அதிக நிதி ஆதாரங்கள் வழங்க வேண்டும் என இந்தக் குழு வழங்கிய பல்வேறு பரிந்துரைகள் பஞ்சாயத்து அரசாங்கங்களுக்கு புதுரத்தம் பாய்ச்சியது.

100 ரூபாயில் 17 ரூபாய்...

கிராமங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 100 ரூபாய் ஒதுக்கினால் வெறும் 17 ரூபாய் மட்டும்தான் கிராமங்களுக்குப் போய்ச் சேருகிறது. ஆறில் ஐந்து பங்கு நிதி மாநில அரசுகளின் நிர்வாகச் செலவுகளுக்கு சென்று விடுகிறது என்பதை இந்திரா காந்தி தேசிய ஆய்வு நிறுவனம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. பஞ்சாயத்து அரசாங்கங்களுக்கு அதிகாரம் வழங்கும் 64ஆவது சட்டத் திருத்தத்தை 1989 ஆம் ஆண்டில் கொண்டு வரும் போது ‘தில்லியிலிருந்து ஒரு யானையை அனுப்பினால் அதன் வால் தான் கிராமத்துக்குப் போய்ச் சேருகிறது’ என பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார். ஆனாலும் மக்களவையில் இச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டது. அடுத்து வந்த வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு பஞ்சாயத்து அரசாங்கம் வலுப்பெறும் முயற்சிகளை எடுத்தது. இதற்காக அவர் மாநில முதலமைச்சர்களின் மாநாட்டை கூட்டினார். அதில் உரையாற்றிய பிரதமர் வி.பி.சிங், “கூட்டாட்சித் தத்துவத்தை பிரதிபலிக்க முற்போக்கான, நேர்மையான, பஞ்சாயத்து அரசாங்கத்தை ஏற்படுத்துங்கள்” என்றார். இவரது அரசும் இடையிலேயே பாரதிய ஜனதாவால் கவிழ்க்கப்பட்டதால் சட்டப்பூர்வ அங்கீகாரம் என்பது கனவானது.

கனவு நிறைவேறியது...

ராஜீவ்காந்தி மறைவுக்குப் பிறகு பிரதமரான நரசிம்மராவ், சில திருத்தங்களுடன் பஞ்சாயத்து ராஜ் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை 73 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தமாக 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டு வந்தார். அது 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநில அரசுகளும் புதிய திருத்தத்திற்கேற்ப தங்கள் பஞ்சாயத்து சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய அரசு நிர்ப்பந்தித்தது.

அதன்படி, தமிழக ஊராட்சிகள் சட்டம் 1950 நீக்கப்பட்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பஞ்சாயத்து களுக்கும் அரசியலமைப்பு அங்கீகாரம் உறுதி செய்யப்பட்டது. 13 அத்தியாயங்களாகவும் 262 பிரிவுகளாக பகுக்கப்பட்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம், ஊராட்சி மன்றம், மாவட்ட ஊராட்சி என மூன்று அடுக்கு நிலை பஞ்சாயத்து அரசாங்கம் உருவாக்கப்பட்டது. மூன்றில் ஒரு பங்குக்கு குறையாமல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, கிராம சபை போன்ற முற்போக்கான கருத்துக்கள் பஞ்சாயத்து அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்டன. சுதந்திரத்திற்கு முன்பும் விடுதலைக்குப் பிறகும் நாட்டின் பஞ்சாயத்து அமைப்புகளையும், கிராம அளவிலான சுய ராஜ்யத்தையும் வலுப்படுத்த பல்வேறு நிலைகளில் பல்வேறு அமைப்புகளால் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தன. இத்தகைய முயற்சிகளின் விளைவாக 73-ஆவது சட்டத் திருத்தத்திற்கு பின் அரசியலமைப்பின் வரையறைக்குட்பட்டு அதிகாரப் பரவலுக்கு போராடி வருகின்றன. பஞ்சாயத்து அமைப்புகளின் முக்கியத்துவம் ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்களிப்பின் அவசியம் போன்ற கருத்துகள் வலிமை பெற்று பெரும்பாலானோரிடம் சென்றடைந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி அமைப்புகளுக்கு  மூன்றடுக்கு முறையில் தேர்தல் நடைபெற்று வந்தது. 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியோடு பதவிக்காலம் முடிவடைந்தும் அதிமுக ஆட்சியால் தேர்தல் தள்ளிப்போனது. திமுக தொடுத்த வழக்கில் பல முறை நீதிமன்றத்தின் கண்டனத்திற்குள் ளானது ஆளும் அதிமுக. நீதிமன்றத்தின் கட்டாயத்தால் ஒருவழியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.

கேலிக்கூத்து...

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஆளும் கட்சியின்  ‘சித்து’விளையாட்டால் விருதுநகரில் கொலையில் முடிந்தது. ஆனால், அந்த மாவட்ட அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, “ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடுவது  இன்று-நேற்று நடப்பதல்ல. நாடு விடுதலை அடைந்தது முதல் நடந்து வருகிறது. இதை ஊடகங்கள்தான் இப்போது பெரிதாக்கி வருகிறது” என கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் பொசக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி இட ஒதுக்கீட்டில் தலித் பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த கிராமத்தில் ஆதிக்க பிரிவைச் சேர்ந்த வசதி படைத்த பழனி மகன் முருகன் தனது பினாமியான இருளர் இனத்தைச் சேர்ந்த இருளாயி என்ற பெண்ணை நிறுத்தி ரூ.16 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார். (தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர்’ நாடகத்தை நினைவுபடுத்துகிறது.) இதற்கு முன்பும் இப்படி சில ஊராட்சிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்திருக்கிறது என்றாலும் அதிகார பலம், காவல்துறை, அதிகாரிகள்,தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் ஆளும் கட்சி நடவடிக்கைகள்  ஜனநாயக தேர்தல் முறையையே கேலிக்கூத்தாக்கின. ஆயினும் மக்கள் பிரதிநிதிகள் தற்போது பதவியேற்று செயல்படத் துவங்கியுள்ளனர்.

மக்களின் குடியுரிமைக்கே அச்சுறுத்தலாக வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாடே கொந்தளித்திருக்கும் இந்த தருணத்தில், இந்திய அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்துகிற ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய லட்சியங்களை பாதுகாக்க இனிமேல் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் பிரதிநிதிகளும் ஏற்கனவே கிராமப்புற உள்ளாட்சிகளில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளும் தங்களது கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்து செவ்வனே செயலாற்றி காந்தி கண்ட கனவினை நிறைவேற்ற வேண்டும்.