தமிழக ஊர்களின் பெயர்களை ஆங்கில எழுத்துகளில் சரியாக எழுதுவதுதொடர்பான அரசாணை, பொதுவான வரவேற்புக்கிடையே கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளான பின்னணியில், தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
சரியாக எழுத வைப்பது நல்ல நடவடிக்கைதான் என்றாலும் தற்போதைய கொரோனா போராட்டக் காலத்தில் இதற்கு என்ன அவசரம் என்பது உள்ளிட்ட கேளவிகளுக்குப் பதிலில்லை என்றாலும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா
பாண்டியராஜன், இதற்கான பணிகள் வல்லுநர்களைக் கொண்டு நடைபெற்று வருவதாகவும், விரைவில் புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
கவுரவப் பிரச்சனையாக்காமல் அரசாணையை விலக்கிக்கொண்டது பாராட்டத்தக்கதே. ஆயினும் அந்த வல்லுநர்கள் யார் யார் என்பதை மக்களுக்குத் தெரிவிப்பது உள்ளிட்ட வெளிப்படையான அணுகுமுறைகளை மேற்கொள்ளலாமே? தமிழறிஞர்கள் மட்டுமல்லாமல், இதில் அக்கறையுள்ள பல்வேறு தரப்பினரையும் ஈடுபடுத்தலாமே?LONDON என்ற ஊரை இங்கொருவர் தமிழில் “லோண்டோன்” என்று தவறாக உச்சரித்தால் இடுப்பைப் பிடித்துக் கொண்டு சிரிக்கிறவர்கள், எழும்பூரை ஆங்கிலத்திலும் எழும்பூர் என்றே சரியாக உச்சரிப்பதற்கு வழிசெய்தால் அதற்கும் விழுந்துவிழுந்து சிரிக்கிறார்கள். வேறு சிலர் சமஸ்கிருத எழுத்துகள் புகுத்தப்பட்டதை மாற்றுவதற்கும் இது இட்டுச் செல்லுமோ என்று கடுப்பாகிறார்கள். ஆனால் அக்கறையோடு விமர்சித்தவர்கள் மாற்று வழிகளையும் காட்டியிருக்கிறார்கள்.
மொழியியலாளர் குழு ஒன்றைஅமைத்தல், வேறு பல நாடுகளிலிருந்தும் தமிழர் பிரதிநிதிகளை அதில் இணைத்தல், இதற்கென்றே இயங்கிவரும் பன்னாட்டு ஒலியியல் கழகம், ஐஎஸ்ஓ, யூனிகோட் கூட்டிணைவு போன்ற அமைப்புகளின் வழி
காட்டலைப் பெறுதல், ஓர் ஆவணத்தை உருவாக்கிச் சுற்றுக்கு விடுதல், கணிப் பொறியாளர்கள், அகராதியியலாளர்கள், இடப்பெயர் வல்லுநர்களுடன் விவாதித்துத் தமிழ் ரோமன் வரிவடிவத்தை உருவாக்குதல் போன்ற பயனுள்ள ஆலோ
சனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை ஏற்றுச் செயல்படுத்த அரசு முன் வருவதுதான் ஆக்கப்பூர்வமானது.ஆக்கப்பூர்வமான வழிகளை ஏற்க மக்கள் தயார், அரசு தயாரா?
===அ.குமரேசன்===