சென்னை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பிரபல இயக்குநர் கவுதம் மேனன் "குயின்" என்கிற பெயரில் வெப் (இணைய) தொடர் வரும் சனியன்று வெளியாகவுள்ளது.இந்த தொடரில் ஜெயலலிதாவாக முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இதற்கான போஸ்டர், டீஸர், டிரெய்லர் இணையத்தை கலக்கி வரும் நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான தீபா," என் அத்தை பற்றி தன் அனுமதி இல்லாமல் படமோ, இணையத் தொடரோ எதையும் தயாரிக்கவோ, விளம்பரப்படுத்தவோ, திரையிடவோ கூடாது" என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு திங்களன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பினரும் ஆஜராகிய நிலையில், "குயின்" தொடர் சனிக்கிழமை வெளியாகப் போவதாகக் கூறப்படுகிறது. அதனால் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று தீபா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கவுதம் மேனன் தரப்போ, தீபா தொடர்ந்த வழக்கு தொடர்பான எந்த ஆவணமும் தங்களிடம் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆவணங்களை கவுதம் மேனன் தரப்புக்கு அளிக்க தீபாவுக்கு உத்தரவிட்டு, 11-ஆம் தேதி கவுதம் மேனன் தரப்பு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டார்.