tamilnadu

img

6ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது

வாக்களித்த பின் ராகுல் காந்தி பேட்டி

புதுதில்லி, மே 12-2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டவாக்குப்பதிவு ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில் மே 12 ஞாயிறன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடை பெற்றது. மொத்தம் 59 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 10,17,82,472 வாக்காளர்கள் வாக்குரிமைபெற்றிருந்தனர். மொத்தம் 979 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 1,13,167 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பீகார், மத்தியப்பிரதேசம், ஹரியானா,தில்லி, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங் களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்தந்த மாநில போலீசாருடன் மத்திய பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல்பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டது.ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா காலையில் தனது குடும்பத்துடன் வந்து ரோதக்கில் வாக்களித்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் காலையில் வாக்களித்தனர். தில்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித் தார். தில்லி அவுரங்கசிப் லேன் பகுதி யில் உள்ள என்.பி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் ராகுல்காந்தி வாக்களித்தார். ஹரியானா மாநிலம் குருகிராமில் பைன்கிரிஸ்ட் பள்ளி வாக்குச்சாவடியில் விராட்கோலி தனது சகோதரருடன் வந்து வாக்களித்தார். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், ஹரியானா முதல்வர் மனோகர் லால், போபால் பாஜகவேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாகூர்,பாஜக வேட்பாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் காலையில் வாக்களித்தனர்.தில்லியில் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நரேந்திர மோடி வெறுப்பை பயன் படுத்துகிறார். காங்கிரஸ் அன்பை பயன்படுத்தியுள்ளது. அன்புதான் வெற்றி பெறும் என நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.