சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது, ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்று வந்தது. அதில் ரூ.1.04 கோடி பணம் இருந்ததை அடுத்து, தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது அடையாறு ஆக்சிஸ் வங்கியில் இருந்து இருங்காட்டுகோட்டை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், காட்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளுக்கு பணம் கொண்டு செல்லப்படுவதாக ஊழியர்கள் கூறினர். மேலும் அதற்கான வங்கி ஆவணங்களையும் தேர்தல் அதிகாரிகளிடம் காண்பித்தனர்.
எனினும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சமயத்தில் வங்கி பணம் கொண்டு செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சிறப்பு அனுமதி கடிதம் இல்லாததால் வங்கி பணம் ரூ.1.04 கோடியை பறிமுதல் செய்தனர். பணம் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
இதை அடுத்து வங்கி சார்பில் சிறப்பு அனுமதி சான்றிதழ் பெற்று, அதனை சமர்பித்தவுடன் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.