tamilnadu

img

விவசாயிகளின் ஆவேசத்துக்குப் பணிந்தது பெப்சிகோ

புதுதில்லி, மே 3-குஜராத் உருளைக்கிழங்கு பயிரிடும் விவசாயிகள் மீது 4.2 கோடி ரூபாய்க்கு வழக்கு தொடுத்திருந்த பெப்சிகோ நிறுவனம் விவசாயிகளின் மத்தியில் கிளர்ந்தெழுந்த ஆவேசத்திற்குப் பின் தற்போது வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறது.வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ள அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தின் முன்பு, வெள்ளிக்கிழமை யன்று பெப்சிகோ நிறுவனத்தின் வழக்குரைஞர் ஆஜராகி, சில உறுதிமொழிகளை விவசாயிகள் எழுதித்தரும் பட்சத்தில் வழக்குகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.பெப்சிகோ நிறுவனம் பதிவு செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு ரகங்களை விவசாயிகள் பயிரிடக்கூடாது, தாங்கள் பதிவு செய்துவைத்துள்ள உருளைக் கிழங்கு ரகங்களை வைத்திருக்கும் விவசாயிகள் அவற்றை அழித்துவிட வேண்டும் அல்லது பெப்சிகோவின் கூட்டு விவசாயத் திட்டத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனைகளாகும். இத்திட்டத்தில் ஒரு விவசாயி சேர்வதாக ஒப்புக்கொண்டுவிட்டாரென்றால், பின்னர் பெப்சிகோ நிறுவனத்திடமிருந்துதான் உருளைக்கிழங்கு பயிரிடுவதற்கான விதைகளை வாங்க வேண்டும், விளைந்த உருளைக் கிழங்கை பெப்சிகோ நிறுவனத்திற்குத்தான் விற்க வேண்டும்.

விவசாயிகளின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த நிபந்தனைகள் குறித்து தாங்கள் பதில் சொல்வதற்குக் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டதன் அடிப்படையில் வழக்கு விசாரணை ஜூன் 12க்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா கூறுகையில், “உலக வர்த்தக அமைப்பின் கீழ், இந்திய விவசாயிகளை எப்படியெல்லாம் சுரண்டலாம் என்பதைச் சோதித்துப் பார்க்கும் விதத்தில் ஒரு சோதனை வழக்காக (வநளவ உயளந-ஆக) விவசாயிகள் மீது கார்ப்பரேட்டுகள் இவ்வழக்கினைத் தொடுத்திருக்கிறார்கள்,” என்றார்.