புதுதில்லி, ஏப்.21-நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியாகும் ‘மோடி - ஜர்னி ஆப் ஏ காமன்மேன்’ என்ற வெப்சீரிஸுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பி.எம்.நரேந்திர மோடி’ திரைப்படத்தை வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. அதன் பின்னர் தேர்தல் ஆணையம் அரசியல் தொடர்பான கருத்துகளையுடைய அத்தனை வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களையும் மக்களவைத் தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது எனஉத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.அதே சமயம் ‘மோடி - ஜர்னி ஆப் ஏ காமன் மேன்’ என்றபெயரில், வோடஃபோன் ப்ளேயில், ஒரு வெப் சீரிஸ் வெளியாகி வருகிறது. இதை ஈரோஸ் ஒரிஜினல் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்த வெப்சீரிஸுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மக்களவைத் தேர்தல்முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.10 எபிசோடுகள் உள்ள இந்தத் தொடரில் ஏற்கெனவே ஐந்து எபிசோடுகள் வெளியாகிவிட்டன. உமேஷ் சுக்லா இயக்கியுள்ள இந்தத் தொடரில் மோடியாக மகேஷ் தாகூர் நடித்துள்ளார். குஜராத்தில் உள்ள சித்பூர், வாட்நகர் ஆகியபகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.