கிருஷ்ணகிரியில் காணப்பட்ட நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகளால், பயிர்களுக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் இருந்து பாகிஸ்தான் வழியாக வந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா பல லட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவுக்கு பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, கிழக்கு பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்கள் உட்பட இந்தியாவில் 17 மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பரவும் அபாயம் என்று ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்து இருந்தது.
இதேபோல, இந்தியாவில் இந்த ஆண்டு வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஏற்படும் பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் எனவும், ஜூன் மாதம் மத்தியில் கர்நாடகா, தெலங்கானா, உத்தரகண்ட், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 12 மாநிலங்களில் படையெடுக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியை அடுத்த நேரலகிரி கிராமத்தில் ஏராளமான வெட்டுக்கிளிகள் வாழை மரங்கள் மற்றும் செடிகளில் காணப்பட்டன. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன் பிறகு, அதிகாரி அப்பகுதிக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டதில், அவை வட மாநிலங்களில் இருந்து வந்த வெட்டுக்கிளிகள் அல்ல என்று தெரிவித்துள்ளனர்.