சென்னை
தமிழகத்தில் புதிய வடிவில் எழுச்சி பெற்றுள்ள கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் முழுஊரடங்கு விதிக்கப்படவுள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தாம்பரம் மண்டலத்தை பெற்றுள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன் ஐ.ஏ.எஸ். மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாக சீர்திருத்தம் காரணமாக தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். வணிக வரித்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அவர் இடத்தில் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இவர் சென்னை மண்டல சிறப்பு அதிகாரி பொறுப்பை சேர்த்து கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ். கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கவனித்த பீலா ராஜேஷ், பெரியளவு கொரோனா பாதிப்பு இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.