உடல்நலக்குறைவால் இன்று காலமான திரைப்பட இயக்குநர் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் சு. வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர் . அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியைத் தீர்மானித்த முக்கியத் திரும்புமுனைகளில் ஒருவர் இயக்குநர், கதை-உரையாடல் எழுத்தாளர், பிற்காலத்தில் நடிகராகவும இயங்கிய மகேந்திரன். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பிறந்த அலெக்சாண்டர் பின்னர் திரைப்படக்குடிலாகிய சென்னையில் மகேந்திரனாகப் புகழ்பெற்று எல்லோரது கவனத்தைப் பெற்றது மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவை இந்தியாவும் உலகமும் கவனிக்க வைப்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
1978ல் ‘முள்ளும் மலரும்’ தொடங்கி, அதற்கடுத்த ஆண்டில் ‘உதிரிப்பூக்கள்’, பின்னர் ‘பூட்டாத பூக்கள்’, ‘மெட்டி’, ‘நண்டு’ ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘அழகிய கண்ணே’, ‘கைகொடுக்கும் கை’. ‘கண்ணுக்கு மை எழுது’, ‘ஊர் பஞ்சாயத்து’, இறுதியாக 2006ல் ‘சாசனம்’ ஆகிய படங்கள் அவர் இயக்கி வழங்கியவை. வணிக சினிமா வட்டத்திற்குள் வாழ்க்கை சார்ந்த நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தவைத்த அவரது ஆக்கங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய கலை அனுபவத்தைக் கற்றுக்கொடுப்பவையாக அமைந்தன. திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கும் இளம் கலைஞர்களுக்கும் அவரது படைப்புகளும், ‘சினிமாவும் நானும்’ என்ற அவரது புத்தகமும் பயன்மிக்க வழிகாட்டிப் பாடங்களாக இருக்கின்றன.
பல்வேறு படங்களுக்குக் கதை கொடுத்த, பல படங்களுக்கு உரையாடல் எழுதிய, தொலைக்காட்சிப் படங்களையும் உருவாக்கி, புகழ்பெற்ற பல நடிப்புக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய அவர் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கால்பதித்தார். தொடக்கத்தில் சிறிது காலம் பத்திரிகையாளராகவும் செயல்பட்ட மகேந்திரன், தமுஎகச மேடைகளுக்கும் வந்துள்ளார். கலைப் பசி கொண்டவருக்குக் கடைசி வரையில் ஓய்வில்லை என்று கூறிய அவர் அதற்குத் தானே ஒரு சாட்சியாக விளங்கினார். மக்களிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிவந்த அவர் அதற்கும் தனது படைப்புகளையே சாட்சியமாக விட்டுச்சென்றுள்ளார்.
இறப்பில்லா கலைப் படைப்புகளை வழங்கிய மகேந்திரன் உடல்நலக்குறைவால் 79வது வயதில் மரணத்தைத் தழுவியது ஈடு செய்ய முடியாத இழப்பேயாகும். தங்களது சொந்தக் குடும்பச் சோகம் போல் உணர்கிற தமிழ்த் திரையுலகினரின் உணர்வோடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன்னையும் இணைத்துக்கொள்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் மகேந்திரன் நினைவுக்குப் புகழஞ்சலியும் தெரிவித்துக்கொள்கிறது.