சென்னை
தென்னிந்திய திரையுலகில் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்தவர் நடிகை ரித்விகா. சென்னையில் பிறந்தவ பிறந்த தமிழ் பெண்ணான இவர் 2013-ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான "பரதேசி" படம் மூலம் திரைத்துறைக்கு வந்தார். துணை நடிகையாக அறிமுகமான ரித்விகா அப்படத்தில் அசத்தலாக நடித்திருந்தார். தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான "மெட்ராஸ்" படத்தில் துணை நடிகையாக நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்.
டார்ச்லைட் படத்தில் தைரியமாக பாலியல் தொழிலாளியாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த ரித்விகாவுக்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்தன. மேலும் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் பட்டம் வென்று தனது இமேஜை வளர்த்துக்கொண்டார்.
ஆனால் இவர் திரைத்துறைக்கு வந்த காலத்திலிருந்தே பல தவறான தகவல்கள் அதிகம் டிரெண்ட் ஆகின. இதில் முக்கியமாக ரித்விகா தலித் எனவும், அவரை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பல அவதூறான தகவல்கள் அதிகம் வெளியாகின. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறான தகவல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை ரித்விகா நேற்று (திங்கள்) தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில்," தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய அந்த பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க. ஒரு வகையில் நானும் தலித் தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனின் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித். எம்மை தலித்தாக்கிய பிழையும், பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகை பாராட்டியதற்கு நன்றி. பி.கு. தலித் பெண்கள் என்னை விட அழகு" என பதிவிட்டுள்ளார்.
ரித்விகாவின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் டாப் டிரெண்டிங்கில் உள்ளது.