சென்னை
இந்தியாவில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசு இரண்டாம் கட்ட ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த ஊரடங்கு மே 3-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், கடந்த ஒருமாதமாகக் காலமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இந்த ஊரடங்கை வசதிபடைத்தவர்கள் சமாளித்து வருகின்றனர். ஆனால் தினக்கூலிகள் அரசு தரும் சொற்ப நிதி, ரேஷன் பொருட்களை வைத்து சமாளித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் திரட்டி வரும் நிலையில், முன்னணி நடிகர் விஜய் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ. 1.30 கோடி வழங்கியுள்ளார்.
சினிமா தொழிலாளர் சங்கமான பெப்சிக்கு ரூ.25 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1.30 கோடி நிதி கொரோனா தடுப்பு பணிக்கு வழங்குவதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
கொரோனா நிவாரணத்திற்கு திரையுலகத்தில் பலர் நிதி வழங்கினாலும், தொலைநோக்கு பார்வையுடன் தென்னிந்திய மக்களுக்கும் சேர்த்து நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்-யை சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.